வேவ் போர்டு ஓட்டியபடியே பந்தை கைகளில் ஜக்ளிங் செய்த கோவை மாணவரின் சாதனை 'இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’சில் இடம்பெற்றுள்ளது.
கோவை தடாகம் சாலை கே.என்.ஜி புதூர் பகுதியை சேர்ந்த மேஜிக் மகா என்பவரது மகன் சந்தோஷ்குமார். இவர், அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். வேவ் போர்டு ஓட்டியபடியே கையில் மூன்று பந்துகளை ஜக்ளிங் செய்ததை இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அங்கீகரித்து உள்ளது.
தனது தந்தை ஜக்ளிங் செய்வதை பார்த்து தனக்கும் ஆர்வம் ஏற்பட்டதாகவும், ஏதாவது சாதனைபுரிய வேண்டும் என்ற நோக்கில் கொரோனா காலகட்டத்தில் தீவிர பயிற்சி மேற்கொண்டதாகவும் தெரிவித்த மாணவர் சந்தோஷ்குமார், கடந்த நான்கு மாதங்களாக வேவ் போர்டு ஓட்டியபடி பந்துகளை ஜக்ளிங் செய்து தீவிர பயிற்சி மேற்கொண்டதாக கூறினார்.
சந்தோஷ்குமார் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், இரண்டு அடி இடைவெளியில் இருபத்தி ஐந்து கோன்களை வைத்து 50 அடி தூரத்தை ஒரு நிமிடத்தில் 150 முறை ஜக்ளிங் செய்துள்ளார். இதை இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸிற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், 25 பேர் கொண்ட குழு உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். இது தற்போது இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம் பெற்று இருக்கிறது. இதற்கான சான்றிதழ் இம்மாதம் கிடைக்கப் பெற்றதாக தெரிவித்தார்.
மேலும், தற்போது நான்கு பந்துகள் கொண்டு வேவ் போரில் ஜக்ளிங் பயிற்சி மேற்கொண்டு வருவதாகவும், ஒரு நிமிடத்தில் 50 கோன்களை கடக்க முயற்சி செய்து வருவதாக தெரிவித்த சந்தோஷ்குமார், மூன்று மாதத்தில் இதனை செய்து புதிய சாதனை படைக்க முயற்சி செய்வதாக தெரிவித்தார்.