கடந்தாண்டு ஜூலை 22 ஆம் தேதி காணாமல் போன கடலோரக் காவல்படை விமானத்தில் பயணம் செய்த வீரர் முத்துக்கிருஷ்ணனின் மனைவி தமிழக அரசு தனக்கு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
கடலோர காவல்படைக்கு சொந்தமான AN-32 ரக விமானம் காணாமல்போய் ஓராண்டு இன்றுடன் நிறைவுபெறுகிறது. இதில் பயணம் செய்த 29 பேரின் நிலை இன்று வரை தெரியவில்லை. இதில் தமிழகத்தைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் என்பவரும் அடங்குவார். அரசுப் பணி வழங்குவதன் மூலம் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள முடியும் என முத்துக்கிருஷ்ணனின் மனைவி ஜெயசுமதி கூறியுள்ளார்.
சென்னை தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து 29 பேருடன் கடந்த ஆண்டு ஜூலை 22 ஆம் தேதி அந்தமானுக்கு புறப்பட்டுச் சென்ற ஏஎன்-32 ரக ராணுவ விமானம், திடீரென மாயமானது. பல நாட்கள் விமானத்தை தேடும் பணியில் போர்க்கப்பல்கள், விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டன. ஆனால் எதிலுமே நம்பகமான தகவல்கள் கிடைக்கவில்லை. ஓராண்டு ஆகியும் எந்தத் தகவலும் இல்லாததால் அதில் பயணம் செய்த தமிழக வீரர் முத்துக்கிருஷ்ணனின் மனைவி, தமிழக அரசு தனக்கு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.