தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகளில் 4,805 கோடி ரூபாய் அளவில் 97 சதவிகிதம் நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளதாக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்குட்பட்ட நகைகளுக்கான கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தல் அறிக்கையில் திமுக அறிவித்திருந்தது. அதன்படி தகுதியான நபர்களின் நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, அதற்கான சான்றிதழ் மற்றும் அவர்களின் நகைகள் திருப்பி அளிக்கப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் 5 சவரனுக்குட்ட நகைகளை அடகு வைத்த 14 லட்சத்து, 51 ஆயிரத்து 42 பேருக்கு, 5,296 கோடி ரூபாய் அளவுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் தற்போது வரை தகுதியுள்ள 12 லட்சத்து 19 ஆயிரத்து 106 பயனாளிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அதாவது, தகுதி வாய்ந்த 97 சதவிகிதம் பேருக்கு நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும், மீதம் உள்ள பயனாளிகளுக்கும் விரைவில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இதையும் படிக்க: `மோசமான குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளார் எஸ்.பி.வேலுமணி'- தமிழக அரசு பதில் மனு-முழு விவரம்