பேரறிஞர் அண்ணா முகநூல்
தமிழ்நாடு

”தென்னாட்டின் பெர்னாட் ஷா”| பேரறிஞர் அண்ணாவின் பிறந்த தினம் இன்று!

திராவிடக்கட்சிகள் தமிழ்நாட்டில் வேரூன்றி நிற்க விதைபோட்டவர் தென்னாட்டின் பெர்னாட் ஷா என்று போற்றப்படும் பேரறிஞர் அண்ணா.

PT WEB

திராவிடக்கட்சிகள் தமிழ்நாட்டில் வேரூன்றி நிற்க விதைபோட்டவர் தென்னாட்டின் பெர்னாட் ஷா என்று போற்றப்படும் பேரறிஞர் அண்ணா.

அவர் காட்டிய வழியில்தான், தமிழ்நாட்டை இன்றும் வழிநடத்திக்கொண்டிருக்கின்றன, திராவிடக்கட்சிகள். பேரறிஞர் என்ற அடைமொழிக்குப் பொருத்தமான மாபெரும் தலைவரின் பிறந்தநாளான இன்று ( செப். 15) அவரை நினைவு கூர்வோம்.

"தமிழ்நாடு, தமிழருக்கே" என்று, சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்படும் முன்பே முழங்கியவர், அண்ணா.

"தாய்த்திருநாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் வைத்திருக்கிறோம்.. சுயமரியாதைத் திருமணங்களுக்கு சட்ட வடிவம் தந்திருக்கிறோம். தமிழ் - ஆங்கிலம் என்ற இருமொழிக்கொள்கைதான், மும்மொழிக்கு இடமில்லை" என்றவர் அண்ணா.

இந்த "முப்பெரும் சாதனைகளை மாற்றலாம் என்று நினைத்தாலோ, மாற்றினாலோ மக்கள் நிலை என்னவாகும்? தமிழ்நாட்டில் எப்படிப்பட்ட சூழ்நிலை உருவாகும் என்று நினைக்கின்ற நேரத்தில், அவர்களை அறியாமல் ஒரு அச்சம் தோன்றும். அந்த அச்சம் இருக்கும்வரையில் அண்ணாதுரைதான் இந்த நாட்டை ஆள்கிறான் என்று பொருள்".. என்று உரைத்தவர் அண்ணா.

1967ஆம் ஆண்டில் பேரறிஞர் அண்ணாவினால் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட திராவிட இயக்க ஆட்சியை இன்றுவரை எவராலும் அசைத்துப் பார்க்க முடியவில்லை. Madras presidency, Madras province, Madras State என்றெல்லாம் வரலாற்று ரீதியாக அழைக்கப்பட்ட தமிழ் மக்கள் வாழ்ந்த பகுதி, அரசியல் ரீதியாக 1968ல், சட்டப்பேரவையில் பேரறிஞர் அண்ணாவினால் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம், 'தமிழ்நாடு' என்ற பெயர் பெற்றது.

தமிழ்நாட்டின் அரசியலை மாற்றி அமைத்த இந்த பேரறிஞர், எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற எழுச்சியை அரசியல்படுத்தியவர். தமிழ்நாட்டு அரசியலின் ஒவ்வொரு அடியையும் பார்த்துப்பார்த்து செதுக்கிய பேரறிஞர் அண்ணாவின் தடையற்ற உரையும், மொழிப்புலமையும், எதிரியையும் கட்டிப்போட்டுவிடும்.

தமிழில் அடுக்குமொழியில் விளையாடுகிறீர்களே, ஆங்கிலத்திலும் அதேபோன்று பேச முடியுமா? என ஒருமுறை அண்ணாவிடம் கேட்டுள்ளனர். அதற்கு, 'ஏன் முடியாது, எப்படிப்பட்ட சொற்றொடர் வேண்டும்?' எனக் கேட்டுள்ளார். Because என்ற சொல் தொடர்ந்து மூன்று முறை வரும்படி ஒரு சொற்றொடர் சொல்ல முடியுமா? எனக் கேட்டுள்ளார்கள்.

அதற்கு சற்றும் யோசிக்காமல், "No sentence ends with because, because, because is a conjunction" என பேரறிஞர் அண்ணா கூறிய பதிலில், அதிர்ந்து போயினர் கேள்வியை எழுப்பியவர்கள்.

தென்னாட்டின் பெர்னாட்ஷாவாக போற்றப்படும் அறிஞர் அண்ணாவின் நாடாளுமன்ற உரை இப்போதும் மறக்கமுடியாதது. நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் கடவுள் பெயரால் எனக் கூறி உறுதிமொழி ஏற்பதற்கு பதிலாக மனசாட்சியின்படி அல்லது உளமாற எனக்கூறி உறுதிமொழி ஏற்பதற்கு முதன் முதலில் வித்திட்டவர்.

பிரிட்டன் எம்.பி. சார்லஸ் பிராட்லா. பிரிட்டன் ஆட்சியின் கீழ் இருந்ததால், அந்நாட்டின் நாடாளுமன்றத்தை பின்பற்றியே இந்திய நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும், உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டு வருகின்றனர். இந்தியாவில் உளமாற உறுதியேற்கிறேன் எனக்கூறி, பதவியேற்கும் மரபு தமிழகத்தில் தான் முதல் முறையாக தொடங்கியது. அதற்கு விதை போட்டவர் பேரறிஞர் அண்ணா.

அவருக்குப் பின்னால் கருணாநிதி முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட 1969 மற்றும் 1971 ஆம் ஆண்டுகளிலும், அது தொடர்ந்தது. திமுகவில் இருந்து பிரிந்து அதிமுகவை தொடங்கிய எம்.ஜி. ஆரும், அண்ணாவின் வழிமுறையையே பின்பற்றி, மூன்று முறை ஆட்சி அமைத்தபோதும் உளமாற என்று கூறியே பொறுப்பேற்றுக் கொண்டார்.

பிறப்பும், இறப்பும்

1909 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி காஞ்சிபுரத்தில் நடராஜன்- பங்காரு அம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்த அண்ணாதுரை, அரசியல், பொருளாதாரத் துறைகளில் முதுகலைப் பட்டங்களைப் பெற்றவர். நாடகத்தின் மீது அவருக்கு இருந்த ஈர்ப்பு, பின்னாளில், திரைப்படங்களுக்கு கதை, வசனங்கள் எழுதக் காரணமாக இருந்தது. ஒர் இரவு, வேலைக்காரி, நல்லதம்பி உள்ளிட்ட திரைப்படங்கள் வாயிலாக, வசனங்கள் மூலம் மக்கள் மனதில் பகுத்தறிவு கருத்துக்களைப் பரப்பினார்.

தந்தை பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு முதலில் நீதிக்கட்சியிலும் பின்னர் திராவிடக் கழகத்திலும் இணைந்த அண்ணாதுரை, கருத்து வேறுபாடு காரணமாக கழகத்திலிருந்து பிரிந்து 1949 ஆம் ஆண்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தை நிறுவினார். 1967 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றபோது, முதலமைச்சராக பொறுப்பேற்றார் அண்ணா. ஆட்சிக்கு வந்த ஆண்டுகளில், புற்று நோய் பாதிப்பு ஏற்பட, 1969 ஆம் ஆண்டு காலமானார்.

வேர்கள் மண்ணில் மறைந்திருந்தாலும், விழுதுவிட்டு படர்ந்த மரங்கள், வேரை மறப்பதில்லை. பகுத்தறிவும், சுயமரியாதையும், தமிழ் உணர்வும் இருக்கும்வரை தமிழ்நாடும் அண்ணாவை மறக்கப்போவதில்லை.. இன்றும் தமிழ்நாட்டை ஆள்வது அண்ணாதான்.