தமிழ்நாடு

விமான நிலையம் - கிளாம்பாக்கம் இடையே மெட்ரோ சேவைக்கு‌ திட்டம்

விமான நிலையம் - கிளாம்பாக்கம் இடையே மெட்ரோ சேவைக்கு‌ திட்டம்

jagadeesh

சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்கு மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டது. பரங்கிமலை-சென்ட்ரல், வண்ணாரப்பேட்டை- விமானநிலையம் ஆகியவை தற்போது பயன்பாட்டில் இருந்து வருகிறது. பயணிகள், பொதுமக்கள் வரவேற்பை தொடர்ந்து சென்னை முழுவதும் மெட்ரோ ரயில் சேவை விரிவுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இரண்டாவது கட்டமாக மெட்ரோ ரயில் வழிப்பாதையை விரிவுப்படுத்த திட்ட ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், சென்னை விமானநிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை நீட்டிக்க மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மூவாயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பில் இந்த பணிகள் வரும் 2021-ஆம் ஆண்டு தொடங்க இருப்பதாகவும், அதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. உயர்மட்ட பாதையில் இந்த மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்கப்பட உள்ளது.

விமான நிலையம் - கிளாம்பாக்கம் வரை 15.3 கி.மீ தூரம் மெட்ரோ ரயில் வழித்தடத்திற்கு மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. விமான நிலையம்- கிளாம்பாக்கம் வரை 1.2 கிலோமீட்டர் இடைவெளியில், 13 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. பல்லாவரம், குரோம்பேட்டை, திரு.வி.க நகர், தாம்பரம், இரும்புலியூர், பெருங்களத்தூர், ஆர்.எம்.கே.நகர், வண்டலூர், வண்டலூர் உயிரியல் பூங்கா, கிளாம்பாக்கம் உள்பட 13 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.

சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கத்துக்கு இடையே அமைய இருக்கும் மெட்ரோ ரயில் திட்டம் தென் சென்னை மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.