தமிழ்நாடு

நெகிழி தடை கவலையில்லை ! அசத்தும் கோயம்பேடு பேருந்து நிலைய 'ஹோட்டல்கள்'

நெகிழி தடை கவலையில்லை ! அசத்தும் கோயம்பேடு பேருந்து நிலைய 'ஹோட்டல்கள்'

webteam

சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் இருக்கும் உணவகங்களில் பிளாஸ்டிக் பயன்பாடு முழுமையாகத் தடை செய்யப் பட்டுள்ளது. மேலும், வாடிக்கையாளர்களுக்கு காகித தட்டுகள், சாம்பாருக்கு தொன்னை, பாக்கு மட்டையில் செய்யப்பட்ட ஸ்பூன்களில்தான் உணவுகள் வழங்கப்படுகிறது. இது வாடிக்கையாளர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை தந்துள்ளது.

பிளாஸ்டிக் எனப்படும் நெகிழி பொருட்களை பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடை தமிழகத்தில் ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. அதன்படி உணவுப் பொருள்களை கட்ட பயன்படுத்தப்படும் நெகிழி தாள், நெகிழிகளால் ஆன தெர்மாகோல் தட்டுகள், நெகிழி பூசப்பட்ட காகிதக் குவளைகள், நெகிழி குவளைகள், நீர் நிரப்ப பயன்படும் பைகள், நெகிழி பொட்டலங்கள், நெகிழி தூக்கு பைகள், நெகிழி கொடிகள், நெகிழி விரிப்புகள், நெகிழி பூசப்பட்ட காகிதத் தட்டுகள், நெகிழி தேநீர் குவளைகள், நெகிழி உறிஞ்சு குழல்கள், நெகிழி பூசப்பட்ட பைகள், நெய்யாத நெகிழி பைகள் போன்ற 14 வகையான நெகிழி பொருள்களுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டது.

இதற்காக மாறாக வாழையிலை, பாக்குமர இலை, அலுமினியத்தாள், காகிதச் சுருள், தாமரை இலை ஆகியவற்றை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கண்ணாடி, உலோகத்தால் ஆன குவளைகள், மூங்கில், மரப்பொருள்கள், காகித குழல்கள், துணி, காகிதம், சணல் பைகள், காகித மற்றும் துணிக் கொடிகளைப் பயன்படுத்த அறிவுறுத்தப் பட்டுள்ளது. மேலும்  நெகிழிப் பொருட்கள் மீதான தடையை மீறுவோர் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர். மேலும் விதிகளை மீறுவோர் மீதும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

கோயம்பேட்டில் உள்ள ஒரு ஹோட்டலில் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டு வந்த நெகிழிப் பொருட்களுக்குப் பதிலாக அவர்கள் மரத்திலான ஸ்பூன்களும், தொன்னையும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். அவர்கள் தொன்னையில் சாம்பார்,சட்னி போன்றவற்றை தரத் தொடங்கியுள்ளனர். மேலும் அவர்கள் ஹோட்டல்களில் டீ, காபி, பால் உள்ளிட்டவற்றை வாடிக்கையாளர்களுக்கு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கிளாஸ்களில் கொடுக்கின்றனர். மேலும் இந்த ஹோட்டலில் மரத்திலான தட்டுக்கள் மற்றும் துணிப்பைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தியுள்ளதாக ஊழியர்கள் தெரிவித்தனர். இதனால் தங்களுக்கு சிரமம் ஏற்பட்டாலும் அவர்கள் அரசாங்கத்தின் நெகிழி தடையைச் சிறப்பாக நடைமுறைப்படுத்தி வருவதாக தெரிவிக்கின்றனர். 

கோயம்பேட்டில் உள்ள மற்றொரு ஹோட்டலில் நெகிழி தடையினால் மொத்தமாக பிளாஸ்டிக் ஸ்பூன் பயன்பாட்டை நிறுத்திவிட்டதாக தெரிவித்தனர். மேலும் தங்களது வாடிக்கையாளர்களை கையில் எடுத்தே சாப்பிடுங்கள் என அறிவுறுத்துகின்றனர். இந்த நெகிழி தடை குறித்து கோயம்பேட்டில் இருந்த பயணிகளிடம் நாம் கேட்டபோது அவர்கள், நெகிழி தடை நல்லது என்றாலும் அதற்குறிய மாற்று ஏற்பாட்டை அரசு இன்னும் திறம்பட செய்தால் இங்குள்ள சிறு தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள் என தெரிவித்தனர்.