ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு முதலமைச்சர் ஆறுதல் முகநூல்
தமிழ்நாடு

“குற்றம் செய்தோர் சட்டத்தின்முன் நிறுத்தப்படுவார்கள்”- ஆம்ஸ்ட்ராங் மனைவியிடம் முதல்வர் நேரில் உறுதி!

மறைந்த பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு சென்று முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

ஜெனிட்டா ரோஸ்லின்

படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு சென்று முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

கடந்த ஜூலை 5 ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரில் உள்ள தனது வீட்டின் அருகே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங்கின் கொலை தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை பற்றவைத்தது.

இதனைதொடர்ந்து செம்பியம் காவல்துறை உடனடியாக வழக்குப் பதிவு செய்து, குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க 10 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், நேற்று முன் தினம் நள்ளிரவில் ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பொத்தூரில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை சென்னை அயனாவரத்தில் உள்ள ஆம்ஸ்ட்ராங்கின் இல்லத்திற்கு நேரில் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கலை பதிவு செய்தார். மேலும் ஆம்ஸ்ட்ராங் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். முதலமைச்சருடன் அமைச்சர் சேகர் பாபு, திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரங்கநாதன் உள்ளிட்டோரும் சென்றனர்.

இதனை தொடர்ந்து, முதலமைச்சரிடம் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி கண்ணீர் மல்க முறையிட்டார். தொடர்ந்து, ஆம்ஸ்ட்ராங் மனைவி உள்ளிட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய முதலமைச்சர், இந்த வழக்கில் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு விரைவில் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுக்கொடுக்கபப்டும் என்ற உறுதியையும் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடிக்கு கொடுத்துள்ளார். மேலும் ,ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்திற்கு தமிழக அரசு என்றும் உறுதுணையாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே இந்த வழக்கில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.முன்னதாக, ஆம்ஸ்ர்டாங்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த பகுஜன் சாமாஜ் கட்சியின் தேசிய தலைவர் ,மாயாவதி .. “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. இந்த வழக்கில் உண்மை குற்றவாளிகள் கண்டறியப்படவில்லை.” போன்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.

இதனை தொடர்ந்து இவ்வழக்கினை மேலும் தீவிரப்படுத்தும் விதமாக சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் அதிரடியாக மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக ஒழுங்கு ADGP ஆக இருந்த அருண் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தவகையில், இவ்வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தற்போது முதலமைச்சர் நம்பிக்கை தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.