முதல்வர் ஸ்டாலின் கோப்புப்படம்
தமிழ்நாடு

“தமிழகத்தில் நிம்மதியாக நிறுவனத்தை நடத்தலாமென்ற நம்பிக்கை தொழிலதிபர்களுக்கு வந்துள்ளது” - முதல்வர்

PT WEB

தமிழ்நாடு தொழில் முதலீட்டாளர்களின் மாநாட்டை இன்று தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது... “தமிழ்நாடு தொழில் முதலீட்டில் இன்று முக்கியமான நாள். மாநாடு நடத்துவதை விட அதன்மூலம் வரும் முதலீடுகள் எவ்வளவு என்பதில்தான் வெற்றி அடங்கியிருக்கிறது. கடந்த முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் 14 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் 31 லட்சம் பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மட்டும் போட்டுவிடாமல் அதனை பின் தொடர்ந்து செயல்பாட்டிற்கு கொண்டு வரக்கூடிய பணியினை மேற்கொண்டு வருகிறோம்.

தொழில் வளர்ந்தால் மாநிலமும் வளர்கிறது. வேலைவாய்ப்பு மூலம் ஒவ்வொரு குடும்பமும் வளர்கிறது. அமைதியான சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ள மாநிலங்களை தேடிதான் தொழில் நிறுவனங்கள் வருகின்றன. தமிழ்நாட்டில் நிம்மதியாக தொழில் நிறுவனத்தை நடத்தலாம் என்ற நம்பிக்கை தொழிலதிபர்களுக்கு வந்துள்ளது. அதன் அடையாளமாகத்தான் கடந்த 3 ஆண்டுகளாக ஏராளமான தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டுக்கு வந்துள்ளன.

இங்குவரும் தொழிற்துறையினருக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் முதலீடு செய்து தொழில் நிறுவனங்களை தொடங்கும் போது, பிற தொழில் முதலீட்டாளர்களையும் தமிழகத்திற்கு அழைத்து வந்து தொழில் தொடங்க வையுங்கள். தமிழ்நாடு அரசின் நல்லெண்ண தூதுவர்களாக தொழிற்துறையினர் மாற வேண்டும். பெண்கள் முன்னேற்றத்திற்கு இந்த அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

அனைத்து துறை வளர்ச்சி, அனைத்து சமூக வளர்ச்சி, தமிழ்நாடு முழுவதும் வளர்ச்சி ஏற்பட கவனம் செலுத்து வருகிறோம்.

அனைத்து மாவட்டங்களிலும் தொழில் தொடங்குவதன் மூலம் அதனை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் சமூக பொருளாதார வளர்ச்சி அடையும். தமிழ்நாட்டு இளைஞர்களின் திறமைகள் அனைத்தையும் பயன்படுத்தி கொள்ளுங்கள். திட்டத்தின் பயன்பாட்டிற்கு சாதகமான சூழலை உருவாக்க முயற்சித்து வருகிறோம்” என்று கூறினார்.