இந்நிகழ்வில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பத்திரிகை அதிபர்கள் பெருமளவில் இங்கு குழுமியுள்ளீர்கள். ஆட்சி செயல்படுத்தி வரும் நல்ல திட்டங்களை மனப்பூர்வமாக ஆதரித்து எழுதுங்கள். அப்படி எழுதினால்தான் அதை நீங்கள் விமர்சிக்கும்போது உண்மையான மதிப்பும் மரியாதையும் இருக்கும். எதையும் ஆதரித்து எழுதாமல் விமர்சித்து மட்டுமே எழுதினால், அந்த விமர்சனங்களுக்கு மதிப்பே இருக்காது. சரியானதை ஆதரிப்பதும் தவறை சுட்டிக்காட்டுவதும்தான் நடுநிலை பத்திரிகைக்கு இருக்கக்கூடிய தர்மம். அதன்படி, தமிழ்நாட்டு ஊடகங்கள் செயல்பட வேண்டும் என்று மிகுந்த பணிவோடு கேட்டுக்கொள்கிறேன். எனக்காக இல்லை, நாட்டு மக்களுக்காக, இந்தச் சமுதாயத்திற்காக, இந்த இனத்திற்காக.... சொல்கிறேன்.
மணிப்பூர் மாநிலம் 4 மாதங்களாக எரிந்துகொண்டுள்ளது. மணிப்பூரில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக editors guild of india அமைப்பைச் சேர்ந்தவர்கள் சென்று வந்து அறிக்கை கொடுத்தார்கள். அறிக்கை கொடுத்தவர்கள் மேலேயே மணிப்பூர் அரசு வழக்குப் பதிவு செய்தது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியே கடுமையாக அதைக் கண்டித்துள்ளார்.
உச்சநீதிமன்றமாக இருந்தாலும், தேர்தல் ஆணையமாக இருந்தாலும் அரசியல் சட்ட அமைப்புகள் நெருக்கடிக்கு உள்ளான இந்த நேரத்தில், ஜனநாயகத்தைக் காப்பதற்காக, இந்தியாவைக் காப்பதற்காக வேண்டிய கடமை நான்காவது தூணாக இருக்கக்கூடிய பத்திரிகைகளுக்குத்தான் இருக்கிறது. ஜனநாயகம் காக்கப்பட்டால்தான் பத்திரிகைத் துறை எதிர்காலத்தில் இருக்கும் என்பதை அக்கறை உள்ள வேண்டுகோளாக சுட்டிக்காட்டுகிறேன்” என்றார்.