வரியை சமமாக பகிர்ந்தளிப்பதே கூட்டாட்சி என பிரதமர் முன்னிலையில் முதல்வர் பேசியுள்ளார்.
தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கிவைக்க மற்றும் பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகை புரிந்துள்ளார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன், தமிழக முதல்வர், ஆளுநர் ஆர்.என் ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் தமிழக அமைச்சர்கள் பங்கேற்றனர். தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இந்த விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலை உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ’’திமுக ஆட்சி பொறுப்பேற்றபிறகு பிரதமர் மோடி பங்கேற்கும் முதல் அரசு விழா இது.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை தொடங்கிவைக்க வந்துள்ள பிரதமருக்கு நன்றி. இந்தியாவின் முன்னணி மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும். மற்ற மாநிலங்களின் வளர்ச்சியைவிட தமிழ்நாட்டின் வளர்ச்சி தனித்துவமிக்கது. சமூகநீதி, சமத்துவம், பெண்கள் முன்னேற்றம் ஆகிய அம்சங்களை உள்ளடக்கியது தமிழ்நாடு வளர்ச்சி. அனைவரையும் உள்ளடக்கிய இந்த வளர்ச்சியை திராவிட மாடல் ஆட்சி என குறிப்பிடுகிறோம்.
ஒன்றிய அரசின் நிதி ஆதாரங்களில் தமிழ்நாடு முக்கிய பங்காற்றுகிறது. ஒன்றிய அரசின் மொத்த வரி வருவாயில் தமிழகத்தின் பங்கு 6% ஆகும். ஆனால் ஒன்றிய அரசின் வருவாயில் தமிழ்நாட்டுக்கு 1.21% மட்டுமே. பயனாளிகள் செலுத்தமுடியாத தொகையை மாநில அரசே செலுத்தவேண்டிய நிலை உள்ளது. வரியை சமமாக பகிர்ந்தளிப்பதே உண்மையான கூட்டாட்சி ஆகும்.
சாலை கட்டமைப்பை மேம்படுத்த ஒன்றிய அரசுடன் இணைந்து பணியாற்ற முனைப்புடன் இருக்கிறோம். அதேசமயம் ஒன்றிய, மாநில அரசு இணைந்து செயல்படுத்தும் திட்டங்களுக்கான நிதியை சமமாக ஏற்கவேண்டும். இணை திட்டங்களில் ஒன்றிய அரசு மாநில அரசின் பங்களிப்பை அதிகரிக்கும் போக்கை பார்க்கிறோம்.