முதலமைச்சர்  புதிய தலைமுறை
தமிழ்நாடு

"போதைப்பொருள் விற்பனையை தடுக்க கடும் நடவடிக்கை"- முதல்வர் உறுதி

ஜெனிட்டா ரோஸ்லின்

கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்கும் வகையில் கடுமையான தண்டனை வழங்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இவர்களுக்கு ஆயுள் வரை கடுங்காவல் தண்டனையுடன், ரூ. 10 லட்சம் அபராதம் விதிக்கும் வகையில் சட்டத்தை கடுமையாக்க மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்,போதைப்பொருள் விற்பனையை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் சட்டசபையில் பேசியுள்ளார் .

மேலும் இது குறித்து அவர் தெரிவிக்கையில், “ மக்களவை தேர்தலில் செய்கூலி , சேதாரம் இன்றி 40க்கு 40 வெற்றியை மக்கள் அளித்துள்ளனர். 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலிலும் திமுக கூட்டணி மகத்தான வெற்றிப்பெறும். தேர்தல் தோல்வியை மறைக்கத்தான் அதிமுகவினர் சதித்திட்ட நடவடிக்கையாக கள்ளக்குறிச்சி விவகாரத்தை கிளப்பியது.

கடந்த 19 ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தை கேள்வி பட்டவுடன் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டேன். 20 ஆம் தேதி முழுவதுமான அறிக்கை தாக்கல் செய்தேன். கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து முழுவதுமாக அறிய ஓய்வு பெற்ற நீதிபதி, கோகுல்தாஸ் தலைமையில் ஆணையம் அமைத்தேன். சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட்டேன். அதிகாரிகள், அமைச்சர்களை சம்பந்தப்பட இடத்திற்கு அனுப்பிவைத்தேன்.

குற்றவாளிகளில் 20 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ள்னர். கள்ளச்சாராயம் விஷசாராயம் தொடர்பான குற்றவாளிகள் கைது நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது, இறந்தோர், பாதிக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு இழப்பீடும், பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்வி செலவை அரசே ஏற்றுக்கொண்டுள்ளது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது பணியிடை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை 24 மணி நேரத்தில் எடுத்துள்ளோம். ஆனால், எதுவும் எடுக்கவில்லை என்று அவர்கள் கூறுவது திசை திருப்பும் நாடகம். எதை மறைத்தோம் என்று சிபிஐ விசாரணையை கேட்கிறார்கள். சாத்தான்குளம் சம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டதற்கு சிபிஐ விசாரணை கேட்டீர்களே என்று எதிர்க்கட்சி தலைவர் கேட்டிருக்கிறார்.

மனிதர்கள் இறந்து போனால், இரண்டு பேரா? 20 பேரா என்று பார்ப்பதில்லை. அன்றைய அரசு சம்பவத்தை மறைக்கப் பார்த்தது . அதனால், சிபிஐ விசாரணை கேட்கப்பட்டது. ஆனால், இந்த சம்பவத்தில் எதுவும் மறைக்கப்படவில்லை. குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் விற்பனையை முற்றிலும் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வங்கிக் கணக்குகளை முடக்கி, சொத்துக்களை பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.தமிழக அரசு எதையும் மறைக்கவில்லை முழுவதுமாக விசாரணை செய்து வருகிறோம்.

கோடநாடு வழக்கில் இதுவரை 268 சாட்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருப்பவர்களிடம் இன்டர்போல் உதவியுடன் விசாரித்து வருகிறோம். கடந்த 3 ஆண்டுகளில் காவல்துறையில் 190 அறிவிப்புகளில் 179 அறிவிப்புகள் அமல் படுத்தியுள்ளது. காவல்துறையில் பணியாற்றுபவர்களின் மன அழுத்தத்தை போக்க பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்ற அனைத்து மத திருவிழாக்களையும் சிறப்பாக நடத்தியுள்ளோம். தமிழகத்தில் குற்றங்களை தடுக்க தண்டனைகள் கடுமையாக்கப்படும்.

எதிர்க்கட்சிகளுக்கு எவ்வளவு நேரம் பேச வாய்ப்பு வழங்கப்பட்டது என்று ஒப்பிட வேண்டும்.செங்கல்பட்டு மாவட்டம் கோவளத்தில் புதிய தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம் அமைக்கப்படும். அரசு அலுவலர்களுக்கான மருத்துவக்காப்பீட்டில் உள்ள குளறுபடிகள் சரி செய்யப்படும். கோவை மாநகராட்சியை விபத்தில்லா பகுதியாக மாற்ற ரூ. 5 கோடியில் புதிய திட்டம்,

கோவை, பொள்ளாச்சி, திருப்பூரில் 229 காவலர்கள் குடியிருப்புகள் கட்டப்படும். தமிழகத்தில் புதிதாக 7 இடங்களில் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்கள் அமைக்கப்படும்.” என்று தெரிவித்தார்.