முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் pt web
தமிழ்நாடு

’உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவியா?’ - முதல்வர் ஸ்டாலின் சொன்ன பதில்!

PT WEB

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், தனது கொளத்தூர் தொகுதியில் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், சீனிவாச நகர் 3-வது பிரதான சாலையில் சுமார் 3 கோடியே 25 லட்சம் மதிப்பில் கட்டப்படவுள்ள தொடக்கப்பள்ளிக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, கணேஷ் நகரில் அமைக்கப்பட்டு வரும் துணை மின் நிலையம், வீனஸ் நகரில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் வெளியேற்று நிலையத்தின் செயல்பாடுகள் ஆகியவற்றை பார்வையிட்டார்.

தணிகாசலம் கால்வாயினை அகலப்படுத்தி மேம்படுத்தும் பணிகள், பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துமனையின் கூடுதல் கட்டுமானப் பணிகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்த அவர், பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினார்.

அப்போது, சென்னையில் மழை நீர் தேங்குவதாக எதிர்க்கட்சிகள் எழுப்பிய குற்றச்சாட்டிற்கு பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின், எப்படிப்பட்ட மழை பெய்தாலும், அதனை சந்திக்க தமிழ்நாடு அரசு தயாராக இருப்பதாக கூறினார்.

உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளதாக, அண்மையில் செய்திகள் வெளியானது. இதுபற்றி சூசகமாக பேசிய உதயநிதி ஸ்டாலின், பொறுப்புகள் மாறுவது குறித்து முதலமைச்சரே முடிவெடுப்பார் என கூறியிருந்தார்.

இந்தநிலையில், இதுதொடர்பாக கேள்விக்கு பதிலளித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலினும் சூசகமாகவே பதிலளித்திருக்கிறார். உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்திருக்கிறதே தவிர இன்னும் பழுக்கவில்லை என கூறியிருக்கிறார்.

இதனால், தற்போதைக்கு உதயநிதி ஸ்டாலினின் பொறுப்பில் மாற்றமிருக்காது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்..