சென்னை அரசுப்பள்ளிகளில் நடந்த நிகழ்ச்சி குறித்து சர்ச்சை எழுந்துள்ள நிலையில், பள்ளிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்த புதிய வழிமுறைகளை வகுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், இரண்டு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் இருந்தபடி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவ செல்வங்கள் அறிந்து கொள்ள வேண்டிய அறிவியல் சிந்தனைகள் நமது பாடநூல்களில் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
எதிர்கால சவால்களை மாணவர்கள் தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளவும், அறிவாற்றலை கூர்மைப்படுத்திக் கொள்ளவும் தேவையான சிறப்பான கருத்துகளை ஆசிரியர்களே எடுத்துக்கூற முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
துறைசார்ந்த வல்லுநர்கள், அறிஞர்களை கொண்டு புத்தாக்கப் பயிற்சி வழங்குவதற்கான முயற்சிகளை பள்ளிக்கல்வித் துறை மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
பள்ளிக் குழந்தைகள் முற்போக்கான - அறிவியல் பூர்வமான கருத்துகளையும், வாழ்க்கை நெறிகளையும் பெறும் வகையில் பள்ளிகளில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்த புதிய வழிமுறைகளை வகுத்து வெளியிட வேண்டும் என உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அறிவியல் வழியே முன்னேற்றத்துக்கான வழி எனவும் அந்த பதிவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, அரசுப் பள்ளியில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரம் தொடர்பாக காவல்துறையினர், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உள்ளிட்டோர் விசாரணை நடத்தினர். விசாரணை அறிக்கை 3 நாட்களில் தாக்கல் செய்யப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அசோக் நகர் அரசுப்பள்ளியின் தலைமை ஆசிரியர் தமிழரசி, திருவள்ளூர் மாவட்டம் கோவில் பதாகைக்கு மாற்றப்பட்டதாக முதலில் அறிவிப்பு வெளியானது. ஆனால் சில மணி நேரத்தில், அதே மாவட்டம் பென்னலூர் பேட்டையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியராக தமிழரசி பணியிடமாற்றம் செய்யப்பட்டதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது.
அதேபோல், சைதாப்பேட்டை அரசுப் பள்ளியிலும் சர்ச்சைக்குரிய நிகழ்ச்சி நடத்தப்பட்ட நிலையில், அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சண்முகசுந்தரத்தை செங்கல்பட்டு மாவட்டம் அணைக்கட்டில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பணியிடமாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனிடையே நடந்த தவறுக்கு தலைமை ஆசிரியர் தமிழரசி வருத்தம் தெரிவித்ததால், அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கூடாது என அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.