இரவு ரோந்துபணியில் திருடர்களை பிடித்தபோது அவர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் உட்கோட்டம் நவல்பட்டு காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் குடும்பத்தாருக்கு ஒரு கோடி நிதியை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று வழங்கினார்.
திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் உட்கோட்டம், நவல்பட்டு காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன், 21-11-2021-ம் தேதி அதிகாலை நவல்பட்டு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பூலாங்குடி காலனியில் இரவு ரோந்து பணியில் வாகனசோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத இரண்டு திருடர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பிச்செல்லும்போது துரத்திப் பிடித்துள்ளார்.
இச்சம்பவத்தின்போது அந்த ஆடு திருடர்கள் சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதனை வெட்டி, கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். ரோந்து பணியிலிருக்கும்போது வெட்டிக்கொல்லப்பட்ட பூமிநாதன் மனைவி கவிதா மற்றும் அவரது மகன் குகன் பிரசாத் ஆகியோருக்கு ஒரு கோடி ரூபாய் நிதிக்கான காசோலையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார். பின்னர் செய்தியாளருடன் பேசிய குகன் பிரசாத், தமிழக முதலமைச்சர் தங்களுக்கு ஒரு கோடி ரூபாய் நிதியை வழங்கியதாகவும், விரைவில் அரசு வேலை வழங்க உள்ளதாக உறுதி அளித்ததாகவும் கண்ணீர் மல்க தெரிவித்தார்.