நாட்டின் 78-வது சுதந்திர தின விழா தமிழ்நாடு அரசின் சார்பில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் கொண்டாடப்பட்டது. இதன்படி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செயின்ட் ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில், காலை 9 மணிக்கு மூவர்ணக் கொடியை ஏற்றிவைத்த அதன் பின்னர் தனது சுதந்திரன உரையை ஆற்றினார்.
விழாவில் பங்கேற்ற முதலமைச்சரை, மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலையில் இருந்து சென்னை காவல்துறையினர், இருசக்கர வாகனங்கள் புடைசூழ அழைத்து வந்தனர். பின்னர், கோட்டை கொத்தளத்தில் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதை செய்யப்பட்ட சூழலில், முதலமைச்சர், தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
தேசியக் கொடியை ஏற்றி வைத்த பின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை:
”நாட்டு மக்கள் அனைவருக்கும் விடுதலை நாள் வாழ்த்துகள். சுதந்திரத்துக்காக போராடியவர்களின் நோக்கத்தை நிறைவேற்ற உறுதியளிப்போம். இந்தியாவில் பிற மாநிலங்களை காட்டிலும் தியாகிகளை போற்றுவதில் தமிழகம் சிறந்து விளங்குகிறது.
அரசு மருத்துவமனைகளை நாடி வரும் ஏழை எளியோருக்கு, சிறப்பான சிகிச்சைகளும் தரமான மருந்துகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இருந்தாலும், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நடுத்தரக் குடும்பங்கள் தங்களுக்குத் தேவையான மருந்துகளை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது.
நீரிழிவு, இரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்குத் தொடர்ந்து மருந்துகளை வாங்க வேண்டியுள்ளதால், இவர்களுக்கு அதிக செலவுகள் ஏற்படுகின்றன. இதற்குத் தீர்வாக, பொதுப்பெயர் வகை (ஜெனரிக்) மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் இவர்களுக்குக் கிடைக்கச் செய்யும் வகையில், ”முதல்வர் மருந்தகம்” என்ற புதிய திட்டத்தை இந்த அரசு செயல்படுத்தும். வரும் பொங்கல் திருநாள் முதல் செயல்படுத்தப்படவுள்ள இந்தத் திட்டத்தின்கீழ், முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படும்.
இந்தத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்திட, மருந்தாளுநர்களுக்கும், கூட்டுறவு அமைப்புகளுக்கும் தேவையான கடனுதவியோடு மூன்று லட்சம் ரூபாய் மானிய உதவியாக அரசால் வழங்கப்படும்.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் 400 முன்னாள் இராணுவத்தினர் பயன்பெறும் வகையில், 400 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு ஏறத்தாழ 120 கோடி ரூபாய் முதலீட்டு மானியம் மற்றும் 3 விழுக்காடு வட்டி மானியம் சேர்த்து வழங்கப்படும்.”இதுபோன்ற முக்கிய அறிவிப்புகள் சிலவற்றை முதல்வர் ஸ்டாலின் தனது உரையில் வழங்கினார்.
தொடர்ந்து தகைசால் தமிழர் விருது, டாக்டர் ஏ.பி. ஜே.அப்துல் கலாம் பெயரிலான விருது, துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, முதலமைச்சரின் நல் ஆளுமை விருது போன்ற விருதுகளை வழங்கினார். அதைத் தொடர்ந்து சமூகப் பணியாளர்கள் விருது, சிறந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான விருதுகளும் வழங்கப்பட்டன.