வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் இறுதி அல்லது நவம்பர் மாத ஆரம்பத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரிகள், நீர் நிலைகள், நீர்வழித்தடங்கள் தூர்வாரப்படுகின்றன. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும் மழைநீர் வடிகால்களை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முக்கிய ஆலோசனை நடத்துகிறார். தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
பருவமழை முன்னேற்பாடு தொடர்பாக இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் கேட்டறிவார் எனத் தெரிகிறது. மழையால் மக்கள் பாதிக்கப்படாத வகையில் பணிகளை துரிதப்படுத்த அவர் அறிவுரை வழங்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.