பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் pt web
தமிழ்நாடு

“சென்னை வெள்ளத்தின்போது வராத பிரதமர், தேர்தல் நேரம் என்றதும் ஓடோடி வருகிறார்” - முதல்வர் ஸ்டாலின்!

குஜராத் மாநிலத்திற்கு உடனடியாக வெள்ள நிவாரணம் கொடுத்ததைப் போல் தமிழ்நாட்டுக்கு ஏன் வழங்கவில்லை என மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

PT WEB

மக்களவை தேர்தல் நடைபெற இருக்கின்ற நிலையில் தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக இன்று பிரதமர் மோடி கன்னியாகுமரி வர இருக்கிறார். தொடர்ந்து, பாரதிய ஜனதா பொதுக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட இருக்கிறார்.

மோடி

தேர்தல் ஆணையம் மக்களவை தேர்தல் தேதியை இன்னும் ஓரிரு நாளில் அறிவிக்க வாய்ப்பு உள்ளது என்பதால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. மூன்றாம் முறையாக பிரதமர் பதவியை தக்க வைத்துக்கொள்வதற்காக தீவிர பிரசாரத்தில் பிரதமர் மோடியும் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், பிரதமர் கன்னியாகுமரி வருவது குறித்து, வடசென்னை வளர்ச்சித் திட்ட விரிவாக்க விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “சென்னையை சிங்காரச் சென்னையாக மாற்றியுள்ளோம். 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் சென்னையை சீரழித்தனர். தற்போது திமுக ஆட்சியில் சென்னை மீண்டும் புதுப்பொலிவு அடைந்து வருகிறது. சென்னையை வெள்ளத்தில் மூழ்கடித்ததைப் போல், தமிழ்நாட்டை சீரற்ற நிதிநிலைமையில் அதிமுக மூழ்கடித்தது.

தமிழ்நாடு வெள்ளத்தில் மிதந்தபோது மக்களை பார்க்க வராத பிரதமர் மோடி, ஓட்டுக் கேட்டு மட்டும் வருவது நியாயமா?

குஜராத்தில் மக்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டபோது, அன்றைய தினமே ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டு பிரதமர் மோடி நிவாரணம் வழங்கினார். ஆனால், தமிழ்நாட்டுக்கு நிதி கேட்டால் பிரிவினைவாதி என்கிறார்கள்.

சென்னை வெள்ளத்தின்போது வராத பிரதமர் தேர்தல் நேரம் என்றதும் ஓடோடி வருகிறார். குஜராத்துக்கு உடனே நிதி தந்தார். நல்லது. அதேபோல் ஏன் தமிழ்நாட்டுக்குத் தரவில்லை? மூன்று மாதம் ஆகிவிட்டதே!

இதேநிலைதான் மெட்ரோ ரயில் விரிவாக்கத்துக்கும்! இதைக் கேட்டால் பிரிவினைவாதிகள் என்பதா? நாட்டுப்பற்றைப் பற்றி எங்களுக்கு யாரும் பாடம் எடுக்க வேண்டிய அவசியமில்லை!” என கூறினார்.