தெற்கு அந்தமான் வங்கக்கடல் பகுதியில் நவம்பர் 27ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. அது நவம்பர் 28ஆம் தேதி தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவடைந்தது.
நவம்பர் 30ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதன் தொடர்ச்சியாக தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறியது. டிசம்பர் 3ஆம் தேதி புயலாக வலுவடைந்த நிலையில், அதற்கு மிக்ஜாம் என பெயர் வைக்கப்பட்டது. புயல் உருவானதால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்கள், ஆந்திர கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது. டிசம்பர் 4ஆம் தேதியான நேற்று புயலின் தீவிரம் காரணமாக விடாது பெய்த கனமழையால் சென்னையின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்கடாக மாறின. அதனை அடுத்து புயல் சென்னையை விட்டு விலகி ஆந்திராவின் நெல்லூர் - கவாலிக்கு இடையில் கரையை கடக்க தொடங்கியது மிக்ஜாம் புயல்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, “அனைத்து இடங்களிலும் நீர் வடிந்து, இயல்பு நிலை திரும்ப மேலும் சில காலம் தேவைப்பட்டாலும், அதற்கான முயற்சிகளை உடனடியாக மேற்கொள்ள வெளிமாவட்டங்களில் இருந்து வந்திருக்கும் பணியாளர்கள், அனைத்து அரசு உயர் அலுவலர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அனைவருக்கும் உத்தரவிட்டுள்ளேன்.
இந்தப் பணிகள் அனைத்தையும் நானே நேரடியாகக் கண்காணித்து வருகின்றேன். இந்த இக்கட்டான காலகட்டத்தில் அனைவரும் இணைந்து பணியாற்றி இந்த இயற்கை இடர்ச்சூழலை வென்று வருவோம்” என தெரிவித்துள்ளார்.