அண்ணாமலை - மு.க.ஸ்டாலின் - நிர்மலா சீதாராமன் pt web
தமிழ்நாடு

“அண்ணாமலை குழப்பினாலும் கவலைப்பட மாட்டேன்; ஆனால்...” நிர்மலா சீதாராமன் கருத்துக்கு முதல்வர் பதில்

“யார் வேண்டுமானாலும் குழப்பட்டும், அண்ணாமலை போன்றவர்கள் குழப்பினாலும் நான் கவலைப்பட மாட்டேன். ஆனால் ஒன்றியத்தில் பொறுப்பில் இருக்கக்கூடிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இரண்டு நாட்களுக்கு முன் ஒரு பேட்டி அளித்துள்ளார்...” - முதல்வர் பேச்சு

Angeshwar G

தமிழ்நாட்டில் கோயில் சொத்துகள் திருடப்படுவதாக சில தினங்களுக்கு முன் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியிருந்தார். தொடர்ந்து அதற்கு பதில் அளித்திருந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, “பரம்பரை அறங்காவலர்கள் கோயில் சொத்துகளை தவறான முறையில் பயன்படுத்துவதை தடுக்கவே, இந்து சமய அறநிலையத்துறை உருவாக்கப்பட்டது. 5,500 கோடி ரூபாய் சொத்துக்களை இந்து சமய அறநிலையத்துறை மீட்டுள்ளது” என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துகொண்டார். அப்போது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாரமனின் குற்றச்சாட்டு குறித்து பேசிய அவர், “ஏதேதோ தவறான பிரசாரங்களை, தேவையற்ற பிரசாரங்களை பொய் செய்திகளை ஊடகங்களை பயன்படுத்தியும், சமூக வலைதளங்களைப் பயன்படுத்தியும் மக்களைக் குழப்பிக்கொண்டிருக்கும் செய்திகளையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

யார் வேண்டுமானாலும் குழப்பட்டும், அண்ணாமலை போன்றவர்கள் குழப்பினாலும் நான் கவலைப்பட மாட்டேன். ஆனால் ஒன்றியத்தில் பொறுப்பில் இருக்கக்கூடிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இரண்டு நாட்களுக்கு முன் ஒரு பேட்டி அளித்துள்ளார். கோவில்களை கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறோமாம் நாம். சேகர்பாபு மிக விளக்கமாக தெளிவாக அவருக்கு பதில் சொல்லியுள்ளார். நான் அதில் மேற்கொண்டு விளக்கம் சொல்ல விரும்பவில்லை.

நான் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன். இதுவரை 5,500 கோடி மதிப்புள்ள கோவில் இடங்களின் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளதென்றால் அது திமுக ஆட்சியில்தான். உள்ளபடியே அவர்களுக்கு பக்தி என்ற ஒன்று இருந்தால் திமுக ஆட்சியை பாராட்ட வேண்டும். அது பக்தி அல்ல, பகல் வேஷம். மக்களை ஏமாற்றுவதற்காக வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் உண்மை. இந்த நிலையில்தான் நாடு போய்க்கொண்டிருக்கிறது” என தெரிவித்தார்.