அரசின் எந்தத் துறையை பற்றியும் கமலுக்கு தெரியாது என்றும், சினிமா பற்றி மட்டும் தான் தெரியும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி விமர்சித்துள்ளார்.
விருதுநகரில் மருத்துவக்கல்லூரிக்கு அடிக்கல் நாட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள 3 விதிகளை கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் முதல்வர் குறிப்பிட்டார். சிறுபான்மையினரை எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே தூண்டி விடுவதாகவும் முதல்வர் குற்றஞ்சாட்டினார். சிவகாசியை மாநகராட்சியாக தரம் உயர்த்தும் பணிகள் நடந்து வருவதாக தெரிவித்தார். குண்டாற்றின் குறுக்கே 2 உயர்மட்ட பாலங்கள் கட்டப்படும் என்ற அறிவிப்பையும் அவர் வெளியிட்டார்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர், “11 மாவட்டங்களில் புதிதாக மருத்துவக்கல்லூரிகள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனுமதி கொடுத்த மத்திய அரசுக்கு நன்றி. எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் வரும். அரசின் எந்தத் துறையை பற்றியும் கமலுக்கு தெரியாது. சினிமா குறித்துதான் கமலுக்கு தெரியும்” என்றார்.
முன்னதாக 345 கோடி ரூபாய் செலவில் ராமநாதபுரத்தில் அமையவுள்ள மருத்துவக் கல்லூரிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஆகியோர் அடிக்கல் நாட்டினர். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.