தமிழ்நாடு

இன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை

இன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை

webteam

தமிழக அமைச்சரவைக் கூட்டம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெறுகிறது.

தமிழக சட்டப்பேரவையில் 2019-20 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது. மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் காரணமாக, துறை வாரியான மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறாமல் பேரவை ஒத்திவைக்கப்பட்டது. வருகிற 28 ஆம் தேதி மீண்டும் பேரவைக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. 

தலைமைச் செயலகத்தில் காலை 11 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில், துறைவாரியாக அறிவிக்கப்படவிருக்கும் திட்டங்களுக்கு ஒப்புதல் பெறப்படும் எனத் தெரிகிறது. மேலும், குடிநீர் தட்டுப்பாடு, கடுமையான வறட்சி தொடர்பாக சட்டப்பேரவையில் மேற்கொள்ள வேண்டிய விவாதம், நடவடிக்கை குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

அமைச்சரவைக் கூட்டம் முடிந்ததும் பிற்பகலில் சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. பேரவைத்தலைவர் தனபால் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், திமுக, காங்கிரஸ் கொறடாக்கள் பங்கேற்கவுள்ளனர்