தமிழ்நாடு

இறக்குமதி மணல் விரைவில் விநியோகிக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி

இறக்குமதி மணல் விரைவில் விநியோகிக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி

webteam

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மணல் ஓரிரு மாதங்களில் மக்களுக்கு விநியோகிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

காவிரி டெல்டா பகுதிகளில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதால், நிலத்தின் தன்மை பாதிக்கப்பட்டு வருவதாக சட்டப்பேரவையில் திமுக சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரன் தெரிவித்தார். அதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மணல் திருட்டை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்தார். திமுக ஆண்ட 5 ஆண்டுகளில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய 18 ஆயிரம் லாரிகள் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டதாகவும், ஆனால் கடந்த 6 ஆண்டுகளில் 48 ஆயிரம் மணல் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அதன்மூலம் ரூ.160 கோடி அபராதம் வசூலிக்கும் அளவிற்கு அரசு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்டு பேசிய சந்திசேகரன், மணல் அள்ளுவதிலும், அனுமதி பெறுவதிலும் முறைகேடு நடைபெறுவதாக குற்றஞ்சாட்டினார். அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி சிசிடிவி கேமரா, ஆன்லைன் பதிவு மற்றும் லாரியில் ஜிபிஎஸ் கருவி பொருத்துவது மூலம் மணல் அள்ளுவதிலுள்ள முறைகேடு களையப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மணல் ஓரிரு மாதங்களில் மக்களுக்கு விநியோகிக்கப்படும் என்றார்.