தமிழ்நாடு

“7 பேர் விடுதலையில் ஆளுநர் நிச்சயம் நல்ல முடிவை எடுப்பார்” - முதல்வர் நம்பிக்கை

“7 பேர் விடுதலையில் ஆளுநர் நிச்சயம் நல்ல முடிவை எடுப்பார்” - முதல்வர் நம்பிக்கை

webteam

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் நிச்சயம் நல்ல முடிவை எடுப்பார் என்று காத்துக்கொண்டிருப்பதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.

சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இன்று பேசிய எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் அரசு மெத்தனமாக இருப்பதாக குற்றம்சாட்டினார். அதற்கு பதிலளித்து பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதே அரசின் விருப்பம் என்றும், அதுவே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொள்கை என்றும் கூறினார். அவர்களை விடுதலை செய்வதற்காக, தங்கள் அதிகாரத்திற்கு உட்பட்ட அனைத்தையும் செய்துவிட்டதாக தெரிவித்தார்.

அவர்கள் விடுதலை தொடர்பாக இனி ஆளுநரே முடிவெடுக்க வேண்டும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் குறிப்பிட்டார். மேலும், ஆளுநரிடம் ஏற்கனவே அமைச்சரவையின் முடிவு பற்றி தெரிவிட்டதாக கூறிய அவர், ஆளுநரின் அதிகாரத்தில் தங்களால் தலையிட முடியாது என்றும் தெரிவித்துக்கொண்டார். அவரைத்தொடர்ந்து பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “7 பேர் மீது அக்கறையிருப்பதால் தான் அவர்களை பரோலில் கூட விட்டோம். ஆளுநர் நிச்சயம் நல்ல முடிவை எடுப்பார். அதற்காகத் தான் காத்திருக்கிறோம். நல்ல முடிவு கிடைக்கும் என நம்புகிறோம்” என்று கூறினார்.

இதற்கு மறுகேள்வி எழுப்பிய துரைமுருகன், “தருமபுரி பஸ் எரிப்பு குற்றவாளிகளை மட்டும் சீக்கிரம் விடுதலை செய்துவிட்டீர்கள்” என்று வினவினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் சி.வி.சண்முகம், அவர்கள் மாணவிகளை கொலை செய்ய வேண்டும் என்று உள்நோக்கத்தோடு செய்யவில்லை என்று உச்சநீதிமன்றமே குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்தார்.