தமிழ்நாடு

புதிய தலைமுறை மீது வழக்கு: சட்டப்பேரவையில் முதலமைச்சர் பதில்

Rasus

பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்களின் கோரிக்கை பற்றி விசாரணையின் முடிவில் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

கோவையில் நடைபெற்ற வட்டமேசை விவாதம் நிகழ்ச்சி தொடர்பாக புதிய தலைமுறை நிர்வாகம் மற்றும் அதன் செய்தியாளர் மீது கோவை பீளமேடு காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புதிய தலைமுறை மீது காவல்துறையினரின் வழக்குப்பதிவிற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்து வருகிறது.

இந்நிலையில் புதிய தலைமுறை மீதான வழக்கு பற்றி சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிக் தலைவர் ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். அப்போது புதிய தலைமுறை மீதான வழக்கை உடனே திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் பழனிசாமி, பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்களின் கோரிக்கை பற்றி விசாரணையின் முடிவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். புதிய தலைமுறை மீதான வழக்கு பற்றிய எஃப்ஐஆரில் உள்ள விவரங்களை சட்டப்பேரவையில் கூறிய முதலமைச்சர் பழனிசாமி, பத்திரிகை சுதந்திரத்தை அரசு எப்போதும் மதிப்பதாக தெரிவித்தார்.