கல்லூரிகள், வேளாண் பொருட்கள் பாதுகாப்பு கூடம் உள்ளிட்ட ரூ.86.59 கோடி மதிப்பிலான கட்டடங்களை இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
வேளாண் விளை பொருட்களை மழை, வெயில், ஈரப்பதம் மற்றும் இதர இயற்கை இடர்பாடுகளில் இருந்து பாதுகாத்து விஞ்ஞான முறைப்படி சேமிப்பதற்கு ஏதுவாக திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் ரூ.1.87 கோடி மதிப்பீட்டில் 2 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளவு கொண்ட சேமிப்பு கிடங்கு கட்டப்பட்டுள்ளது. இதேபோல் நாகப்பட்டினம், பெரம்பலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், ஈரோடு, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ரூ.15.90 கோடி மதிப்பீட்டில் வேளாண்மைத்துறை தொடர்பான பல்வேறு கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இவற்றை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காணொளி காட்சி மூலம் திறந்தார்.
அத்துடன் தஞ்சை, ரகுநாதபுரத்தில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரிக்கு ரூ.25.66 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நிர்வாக மற்றும் கல்வியியல் கட்டடங்களையும் அவர் திறந்து வைத்தார். மேலும் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ரூ.7.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டள்ள நிர்வாக மற்றும் கல்வியியல் கட்டங்கள், கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உடற்பயிற்சிக் கூடம் என மொத்தம் ரூ.34.41 கோடி மதிப்பீட்டில் உயர்கல்வித் துறை சார்பில் கட்டப்பட்ட கட்டங்களையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். தலைமைசெயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.