தமிழ்நாடு

டெல்லியில் இன்று பிரதமரை சந்திக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி..!

டெல்லியில் இன்று பிரதமரை சந்திக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி..!

Rasus

கஜா புயல் பாதிப்பு தொடர்பாக இன்று பிரதமரை சந்திக்கும் முதலமைச்சர் பழனிசாமி 13,000 கோடி ரூபாய் நிதி கோருவார் என தகவல் வெளியாகியுள்ளது.

கஜா புயல் பாதிப்புகளை நேரில் பார்வையிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லி சென்றடைந்தார். இன்று காலை 1‌0 மணி அளவில் பிரதமர் நரேந்திர மோடியை ‌‌சந்திக்க இருக்கும் முதலமைச்சர் பழனிசாமி, புயல் பாதிப்பில் இருந்து மீள்‌வதற்‌காக‌‌ 13 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரண நிதி கோர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் மின் இணைப்புகளை சீரமைக்கும் பணிகளுக்கு மட்டும் 5 ஆயிரம் கோடி ரூபாய் நிதி கேட்க இருப்பதாக சொல்லப்படுகிறது. அதேபோல தென்னை விவசாயிகளுக்கு சிறப்பு சலுகைகள் கோரப்படும் என்றும் தெரிகிறது.

கஜா புயலால் ஏராளமானவர்கள் வீடுகளை இழந்துள்ள நிலையில் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கூடுதல் நிதி ஒதுக்கவும் கோரிக்கை முன்வைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமரை சந்திக்கும் போது தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனும் உடன் இருப்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே தமிழக அரசு புயல் நிவாரண நிதியாக ஆயிரம் கோடி ரூபாயை விடுவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம் தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியிருந்தார். பிரதமரை சந்திக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவசர அவசரமாக டெல்லி செல்வது உண்மையிலேயே நிவாரண நிதி கோருவதற்கா? அல்லது தனிப்பட்ட அரசியல் காரணங்களுக்காக? என்றும் டிடிவி தினகரன் வினவியிருந்தார். கஜா புயலால் சேதமடைந்த நூற்றுக்கணக்கான கிராமங்களை, அதிகாரிகள் பார்வையிட்டு இழப்புகளை மதிப்பீடு செய்யாத நிலையில், எதன் அடிப்படையில் முதலமைச்சர் நிவாரணம் கோர இருக்கிறார் என்றும் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.