புயலால் பாதிக்கப்பட்டுள்ள நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு ஆய்வுக்கு செல்லாமல் முதலமைச்சர் பழனிசாமி பாதியிலேயே திரும்பினார்.
‘கஜா’ புயல் கடந்த 15-ஆம் தேதி இரவு நாகை- வேதாரண்யம் இடையே கரையைக் கடந்தது. இதில் நாகை, புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சை, கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகின. ஏராளமான பயிர்களும், வீடுகளும், பொருட்களும் சேதம் அடைந்தன. இதைத்தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலும் மரங்களும் மின் கம்பங்களும் சாய்ந்து போக்குவரத்து மற்றும் மின் இணைப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் அவற்றை சீர் செய்யும் பணியில் பணியாளர்கள் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை முதலமைச்சர் பழனிசாமி இன்று நேரில் ஆய்வு செய்ய திட்டமிட்டிருந்தார். இதற்காக இன்று காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு சென்ற முதலமைச்சர் அதன்பின் ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சென்றார். புதுக்கோட்டை மாவட்டத்தின் மாப்பிள்ளையார்குளம் உள்ளிட்ட பகுதியில் முதலமைச்சர் ஆய்வு செய்தார். அவருடன் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்களும் இருந்தனர். ஆய்வின்போது, புயலால் உயிரிழந்தவர்களின் 6 குடும்பங்களுக்கு தலா ரூபாய் 10 லட்சம் நிவாரண நிதியை முதலமைச்சர் வழங்கினார். இதுதவிர புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்களையும் முதலமைச்சர், துணை முதலமைச்சர் வழங்கினர்.
இதனையடுத்து தஞ்சைக்கு சென்ற முதலமைச்சர் பழனிசாமி அங்கு புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து புயலால் பாதிக்கப்பட்டிருந்த நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு செல்ல முதலமைச்சர் திட்டமிட்டிருந்தார். ஆனால் அங்கு மழை பெய்து வருவதால் மோசமான வானிலை காணப்படுகிறது. இதனையடுத்து புயல் சேத ஆய்வை தொடராத முதலமைச்சர் பழனிசாமி மீண்டும் திருச்சிக்கே திரும்பினார்.