தமிழ்நாடு

"20 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு உடனே தேவை" - பிரமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

Sinekadhara

போதிய அளவு கொரோனா தடுப்பூசிகளை வழங்குமாறு பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

நாடுமுழுவதும் கொரோனா இரண்டாம் அலை அதிதீவிரமாக பரவிவரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி மற்றும் மருத்துவ வசதிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் போதிய அளவு தடுப்பூசிகளை வழங்குமாறு பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

தமிழகத்தில் முதல்கட்ட தடுப்பூசிகள் முடிந்தபிறகு, தற்போது இரண்டாம் கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. வருகிற மே 1ஆம் தேதிமுதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. எனவே தமிழகத்திற்கு கூடுதலாக தடுப்பூசிகள் வேண்டுமெனவும், முதல்கட்டமாக குறைந்தபட்சம் 10 நாட்களுக்குத் தேவையான 20 லட்சம் தடுப்பூசிகளை விரைந்து வழங்குமாறு முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் மூன்று கோரிக்கைகளை வைத்துள்ளார். அதில் 20 லட்சம் தடுப்பூசிகளை விரைந்து வழங்கவேண்டுமெனவும், செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி மையத்திற்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்துதரக்கோரியும், கொரோனா சிகிச்சைமருந்தான ரெம்டெசிவிரை குறைந்த விலைக்கு மாநிலங்கள் பெற வழிவகை செய்யக்கோரியும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.