கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓகி புயலால் பாதிக்கப்பட்டுள்ள ரப்பர், வாழை விவசாயிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிவாரண உதவி அறிவித்துள்ளார்.
ஒகி புயலால் விவசாய நிலங்களில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதற்கட்ட ஆய்வில் 3,623 ஹெக்டேர் பரப்பிற்கும் அதிகமான தோட்டக்கலை பயிர்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 1,900 ஹெக்டேர் பரப்பிலான வாழை மரங்களும், ரப்பர் மரங்கள் சுமார் 1400 ஹெக்டேர் பரப்பிலும் சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிர்சேத மதிப்பீட்டை கணக்கீடு செய்வதற்காக தோட்டக்கலைத்துறை மூலம் 90 குழுக்கள் அமைக்கப்பட்டு கணக்கீட்டு பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
வாழை விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.48,500 முதல் ரூ.63,500 ரூபாய் வரையும், புதிதாக ரப்பர் மரம் பயிரிட விரும்பும் விவசாயிகள் ரப்பர் மர நடவு செய்து, ஊடுபயிராக வாழை மற்றும் அன்னாசி சாகுபடி செய்வதற்கு ஹெக்டெருக்கு ரூ.50 ஆயிரம் மானியமாக வழங்குப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். அத்துடன் கிராம்பு விவசாயிகளுக்காக மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் ஹெக்டேருக்கு 18 ஆயிரம் ரூபாய் இடுபொருள் மானிய உதவியுடன் கூடுதலாக ஹெக்டேருக்கு 10 ஆயிரம் மானியம் சேர்த்து மொத்தம் 28 ஆயிரம் ரூபாய் வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மேலும் குமரி மாவட்டத்தில் 280 ஹெக்டேர் பரப்பில் பயிரிடப்பட்டுள்ள மரவள்ளி, மிளகு, பலா உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்களுக்கும் இதர வேளாண் பயிர்களுக்கும் மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உரிய நிவாரண நிதி வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.