திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த மேல்மா கிராமத்தில் சிப்காட் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தக் கூடாது என்று விவசாயிகள் 125 நாளாக போராடி வருகின்றனர். இந்த நிலையில், அங்கு போராடிய 20 பேர் கைது செய்யப்பட்டனர். குறிப்பாக, குண்டர் சட்டத்தில் 6 விவசாயிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என்று கைதானவர்களின் உறவினர்கள், அமைச்சர் எ.வ. வேலுவிடம் இன்று மனு அளித்திருந்தனர்.
விவகாரம் குறித்து விளக்கம் அளித்த அவர் “இந்த விவகாரத்தில் அரசுக்கு எந்த உள்நோக்கமும் கிடையாது. திருவண்ணாமலை மாவட்டத்தில் தொழிற்சாலைகளே இல்லை. தொழிற்பேட்டை வேண்டுமென்று அரசிடம் முறையிட்டதில் சென்ற அதிமுக ஆட்சியில் தான் சிப்காட் அமைக்க நிலம் கையகப்படுத்த அரசாணையை வெளியிட்டது. அதன் தொடர் நடவடிக்கையாக தற்போது நிலம் எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. 1,200 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டால் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். அரசின் மதிப்பை விட இரண்டரை மடங்கு அதிகமாக கொடுத்துதான் நிலத்தை வாங்குகிறோம்.
இருந்தாலும் 1,851 விவசாயிகளின் நிலம் கையகபடுத்தப்பட உள்ளது. இதில் 231 பேர் மட்டுமே எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அதிலும் சில பேர் தூண்டுதலாலேயே இவர்கள் இவ்வாறு தொடர் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர் என்பதால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும் விவசாயிகளை பழிவாங்க வேண்டும் என்பது அரசின் நோக்கம் கிடையாது. அதனால் விவசாயிகளை விடுவிக்க வேண்டும் என்று அவர்கள் குடும்பத்தினர் மனுக்களை என்னிடம் கொடுத்துள்ளனர். இந்த மனுக்களை இப்பொழுதே எடுத்துக்கொண்டு சென்னைக்கு செல்கிறேன். அங்கு முதலமைச்சரிடம் பேசி இதற்கு நல்ல முடிவை எடுப்பேன்” என்றார்.
அவரது விளக்கத்தைத் தொடர்ந்து, 6 விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.