முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் pt web
தமிழ்நாடு

”நாடு திரும்பிய பின் அமைச்சரவையில் மாற்றமா?”- அமெரிக்கா புறப்படும் முன் முதலமைச்சர் சொன்ன நச் பதில்!

PT WEB

முதலமைச்சரின் அமெரிக்க பயணம்

தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ளும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அதற்கு முன்பாக சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சரின் பயணத்திற்கான முன்னேற்பாடு பணிகளை கவனிக்கும் வகையில் தொழிற்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, தொழிற்துறை மற்றும் தமிழ்நாடு Guidance அமைப்பின் அதிகாரிகள் ஏற்கனவே அமெரிக்கா புறப்பட்டுச் சென்றனர். மொத்தம் 17 நாட்கள் பயணம் மேற்கொள்ளும் முதலமைச்சர், சான் பிரான்சிஸ்கோ, சிகாகோ உள்ளிட்ட நகரங்களில் நடைபெறும் நிகழ்வுகளில் உலகின் முன்னணி நிறுவன தலைவர்களை சந்தித்து பேச உள்ளார்.

கடல் கடந்து சென்றாலும் கவனம் தமிழ்நாட்டில்

சென்னையில் இருந்து செவ்வாய்கிழமை அமெரிக்கா புறப்படும் முதலமைச்சர், 28ஆம் தேதி சான் பிரான்சிஸ்கோ செல்கிறார். அங்கு 29ஆம் தேதி நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் (investors conclave) பங்கேற்கிறார். தொடர்ந்து, 31ஆம் தேதி அமெரிக்க தமிழ்ச் சங்கங்களை சேர்ந்தவர்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார். செப்டம்பர் 2ஆம் தேதி சான்பிரான்சிஸ்கோவிலிருந்து சிகாகோ செல்லும் முதலமைச்சர், செப்டம்பர் 7ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் வெளிநாட்டுவாழ் தமிழர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். மேலும் அமெரிக்காவில் உள்ள முக்கிய நிறுவனங்களின் தலைவர்களையும் சந்திக்க உள்ளார்.

தமிழ்நாடு சிறக்க அயல் நாட்டுக்கு சிறகு விரிக்கிறேன்; உங்கள் வாழ்த்துகளுடன் பறக்கிறேன் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தனது பயணத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில், கடல் கடந்து சென்றாலும் கவனமெல்லாம் தமிழ்நாட்டில்தான் என குறிப்பிட்டுள்ளார். முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு என்ற அழுத்தமான அடையாளத்தை திராவிட மாடல் அரசு வெற்றிரமாக உருவாக்கியுள்ளதாகவும், ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் என்ற இலக்கை நோக்கிய பயணத்தின் மற்றொரு கட்டமே தமது அமெரிக்கப் பயணம் எனவும் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் நிர்வாகப் பணிகள் தொய்வின்றி தொடர அமைச்சர்களும் அதிகாரிகளும் சிறப்பான முறையில் செயல்பட வேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதாகவும் முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

செயல்களே பதில்களாக அமையட்டும்

நம் மீது விமர்சனம் செய்வோர், விவாதம் நடத்துவோருக்கு வார்த்தைகளால் பதில் சொல்ல வேண்டியதில்லை என தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நாம் நிறைவேற்றும் பயனுள்ள செயல்களே பதிலாக அமையட்டும் எனவும் அறிவுரை கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “முதலீடுகளை ஈர்க்க இதுபோன்ற பயணத்தை மேற்கொண்டு வருகிறேன். திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு இந்த மூன்றாண்டு காலத்தில் இதுவரை 872 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. இதன் மொத்த மதிப்பு 9 லட்சத்து 99 ஆயிரத்து 93 கோடி ரூபாய். இதன் மூலம் 18 லட்சத்து 89 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும். இதில் 234 திட்டங்கள் உற்பத்தியை தொடங்கிவிட்டார்கள்.

மாற்றம் ஒன்றுதான் மாறாதது

தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாத காரணத்தினால், தமிழ்நாட்டுக்கு வரக்கூடிய ரூ.573 கோடி ரூபாயை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்த செய்தி வெளியாகியுள்ளது. பள்ளிக் கல்வித் துறையில் தமிழ்நாட்டுக்கான நிதியை உடனடியாக மத்திய அரசு விடுவிக்க வேண்டும். இதுதொடர்பாக திமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்திலும், சம்பந்தப்பட்ட அமைச்சர்களையும் நேரில் சந்தித்து பேசியுள்ளனர். நானும் கடிதம் எழுதியுள்ளேன். தொடர்ந்து வலியுறுத்துவோம்” என தெரிவித்தார்.

அமெரிக்கா சென்று வந்த பிறகு அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா? என்ற கேள்விக்கு மாற்றம் ஒன்றுதான் மாறாதது wait and see என தெரிவித்தார்.