திருச்சி சிறுகனூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வெல்லும் சனநாயகம் என்ற தலைப்பில் மாநாடு நடைபெற்றது. INDIA கூட்டணி கட்சித் தலைவர்கள் பலரும் மாநாட்டில் கலந்துகொண்டனர். மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் 33 தீர்மானங்களை முன்மொழிந்தார்.
இம்மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “திருமாவளவன் சட்டக்கல்லூரி மாணவராக, மாணவர் திமுகவில் பணியாற்றிய காலத்தில் இருந்தே தெரியும். அப்போதே மேடைகளில் அவரது பேச்சு, கொள்கை கர்ஜனையாக இருக்கும். அன்று கழகத்திற்குள் முழங்கினார். இன்று கழக கூட்டணிக்குள் இருந்து முழங்கி வருகிறார். நமக்கிடையே இருப்பது தேர்தல் உறவல்ல., அரசியல் உறவல்ல., கொள்கை உறவு. தந்தை பெரியாரையும், புரட்சியாளர் அம்பேத்கரையும் யாராவது பிரிக்க முடியுமா அதுபோல தான் திமுகவும் விசிகவும்.
சமூக நீதி, சமத்துவ சிந்தனை கொண்ட ஆட்சியை இந்தியா முழுமைக்கும் அமைக்க வேண்டும் என்பதற்காக சகோதரர் திருமாவளவன் இந்த வெல்லும் சனநாயகம் மாநாட்டை கூட்டியுள்ளார். வெல்லும் சனநாயகம் என்று சொன்னால் மட்டும் போதாது., நாம் எல்லோரும் இணைந்து செயல்பட்டாக வேண்டும்.
தமிழ்நாட்டில் பாஜக என்பது பூஜ்ஜியம்.. அதனால் தமிழ்நாட்டில் பாஜகவை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. தமிழ்நாட்டில் மட்டும் பாஜகவை வீழ்த்தினால் போதாது.. அகில இந்திய அளவில் வீழ்த்த வேண்டும். அதற்கான அடித்தளம் INDIA கூட்டணி.
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால்., இந்தியா என்ற கூட்டாட்சி அமைப்பு இருக்காது, ஜனநாயக அமைப்புமுறை இருக்காது, நாடாளுமன்ற நடைமுறை இருக்காது, ஏன், மாநிலங்களே இருக்காது. இதை எல்லோரும் உணர வேண்டும். மாநிலங்களை கார்ப்பரேசன்களாக ஆக்கிவிடுவார்கள்.
பாஜக ஆட்சிக்கு வரக்கூடாது என்ற ஒற்றை லட்சியம்தான் எல்லோருக்கும் இருக்க வேண்டும். பாஜகவிற்கு எதிரான வாக்குகள் சிதறக்கூடாது. பகைவர்களோடு சேர்த்து துரோகிகளையும் மக்களிடம் அடையாளம் காட்ட வேண்டும். INDIA கூட்டணி அமைத்தார்கள், இந்தியாவில் ஆட்சியை கைப்பற்றினார்கள் என்பதே வரலாறாக இருக்க வேண்டும்” என்றார்.