முதலமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் pt web
தமிழ்நாடு

கனமழையால் திக்குமுக்காடிய மதுரை.. மழை பாதிப்பை தடுக்க செல்லூர் மக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு!

மதுரை செல்லூர் கண்மாயில் இருந்து நீரை வெளியேற்ற 11 கோடியே 90 லட்ச ரூபாய் மதிப்பில் சிமெண்ட் கால்வாய் அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

PT WEB

மதுரையில் ஓரிரு தினங்களுக்கு முன் கனமழை கொட்டியது. நகரத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. மழைக்கு காரணமாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் கூறுகையில், “வடக்கு ஒடிசாவில் கரையைக் கடந்த தீவிரப் புயலானது அரபிக் கடலில் இருந்து ஈரப்பதமான மேற்குக் காற்று தமிழகத்தின் ஊடாக ஈர்த்தது. இதன் காரணமாக அக்டோபர் 25 ஆம் தேதியில் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும், அக்டோபர் 24 ஆம் தேதி டெல்டா மாவட்டங்களிலும் பரவலான இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்தது” என தெரிவித்திருந்தார்.

மதுரை கனமழை

மதுரையில் தேங்கிய மழைநீரை வெளியேற்றுவதே கடுமையான பணியாக இருந்தது. பல இடங்களில் வெள்ளநீர் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டதால் மக்கள் தொற்றுநோய்க்கு உள்ளாகும் சூழல் ஏற்பட்டது.

வெள்ளத்தால் பாதிக்கப்பாட்ட பகுதிகளை அமைச்சர் மூர்த்தி, அமைச்சர் கே.என். நேரு, அமைச்சர் பிடி பழனிவேல் தியாகராஜன், எம்பி சு வெங்கடேசன், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ உள்ளிட்டோரும் நேரில் ஆய்வு செய்தனர்.

மழை தொடர்பாக புதிய தலைமுறையிடம் பேசிய எம்பி சு வெங்கடேசன், “வரும் காலத்தில் மழை பாதிப்புகளை சரி செய்ய கூடுதல் அதிகாரிகளை நியமிக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். ஆனால், போதிய அதிகாரிகள் இருப்பதாக விளக்கம் அளித்தார் அமைச்சர் மூர்த்தி.

இதனை அடுத்து, மதுரையில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என சு.வெங்கடேசன், தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதுகுறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் மூர்த்தி, எங்கே பாதிப்பு ஏற்பட்டது, எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டனர் என்பதை எம்.பி.யே சொல்லட்டும் என்றார்.

இந்நிலையில்தான், மதுரையில் மழை, வெள்ள பாதிப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இதில் அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர், மதுரை மாநகராட்சி ஆணையர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், மழையால் செல்லூர் பகுதி இனியும் பாதிக்கப்படாமல் இருக்க 290 மீட்டர் நீளத்துக்கு சிமெண்ட் கால்வாய் அமைக்க வேண்டியதன் அவசியம் குறித்து முதலமைச்சரிடம் எடுத்துரைக்கப்பட்டது. அதன் அடிப்படையில், செல்லூர் கால்வாயில் இருந்து தண்ணீர் வெளியேறுவதற்கு 11 கோடியே 90 லட்ச ரூபாய் மதிப்பில் சிமெண்ட் கால்வாய் அமைக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

மேலும் விருதுநகர் மாவட்டத்தில் காரியாபட்டி மற்றும் மல்லாங்கிணறு பகுதிகளில் கூட்டுக்குடிநீர் திட்டத்தை 75 கோடியே 85 லட்ச ரூபாய் மதிப்பில் கூட்டுக்குடிநீர் திட்டத்தை செயல்படுத்தவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.