முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளம்
தமிழ்நாடு

“முன்கள வீரனாக துணை நிற்பேன்” - கொட்டும் மழையில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் கொட்டும் மழையில் யானைகவுனி, பட்டாளம் உள்ளிட்ட பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து, “இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ள முன்கள வீரனாக துணை நிற்பேன்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

PT WEB

சென்னையில் கொட்டும் மழையில் யானைகவுனி, பட்டாளம் உள்ளிட்ட பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் இன்று ஆய்வு செய்தார். தொடர்ந்து, “இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ள முன்கள வீரனாக துணை நிற்பேன்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர் கனமழையால் சென்னையில் பல இடங்களில் நீர் தேங்கியுள்ளது. சில சுரங்கப்பாதைகள் மூடப்பட்டும் உள்ளன. இவை அனைத்து குறித்தும், மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க அதிகாரிகள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர் இன்றைய கள ஆய்வின்போது கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது அமைச்சர்கள் சேகர்பாபு, கே.என்.நேரு, மேயர் பிரியா ஆகியோர் முதல்வருடன் இருந்தனர்.

ஆய்வின்போது அங்கிருந்த தேநீர் கடைக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு மழைக்கு இதமாக சுடச்சுட தேநீர் அருந்தினார். அந்தப் பகுதியில் இருந்த களப்பணியாளர்களுக்கும் தேநீர் வாங்கிக் கொடுத்து, அவர்களது பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

தொடர்ந்து இதுதொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் இதுகுறித்து பதிவிட்ட முதல்வர், “கொட்டும் மழை உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளத் தன்னலம் கருதாமல் - நேரம் காலம் பார்க்காமல் நம் துயர்துடைக்கக் களம் காண்பவர்கள் தூய்மைப் பணியாளர்கள், மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள்! அவர்களுடன் நானும் எப்போதும் முன்கள வீரனாகத் துணை நிற்பேன்” என்றுள்ளார்.