கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுதல் அரங்கம் திறப்பு விழா ட்விட்டர்
தமிழ்நாடு

“வரலாற்றில் என் பெயர் இடம்பெறுவது, எனக்கு கிடைத்துள்ள பெருமை”- முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

தமிழகத்தில் முதல்முறையாக ஜல்லிக்கட்டு போட்டிக்காக மதுரை கீழக்கரை பகுதியில் ரூ.64 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ‘கலைஞர் நூற்றாண்டு’ ஏறு தழுவுதல் அரங்கத்தை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். அதன் சிறப்புகளை பார்க்கலாம்...

webteam

மதுரை கீழக்கரையில் கலைஞர் நூற்றாண்டு ஜல்லிக்கட்டு அரங்கத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார். தொடர்ந்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியையும் தொடங்கிவைத்தார்.

புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஜல்லிக்கட்டு அரங்கத்தில், ஜல்லிக்கட்டு போட்டி விளையாடுவதற்கு மட்டுமன்றி, ஜல்லிக்கட்டு தொடர்பான வரலாறுகளை எடுத்துரைக்கும் வகையிலும் ஏறு தழுவுதல் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் முந்தைய காலங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றதற்கான வரலாற்று கல்வெட்டுகள், புகைப்படங்கள் ஆகியவையும் அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுள்ளன.

கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுதல் அரங்கம் திறப்பு விழா

மேலும் குழந்தைகள் விளையாடுவதற்கேன தனி விளையாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. எல்இடி திரைகள் மூலம் ஜல்லிக்கட்டு போட்டியை காணும் வகையில் தனி அறை அமைக்கப்பட்டுள்ளது.

மதுரையில் கீழக்கரை கிராமத்தில் 66.80 ஏக்கர் நிலப்பரப்பில், 77,683 சதுரஅடி பரப்பளவில் 62.78 கோடி ரூபாய் செலவில் இது அமைக்கப்பட்டுள்ளது.

“மதுரையை தூங்கா நகரம் என்பர். போட்டி என்று வந்துவிட்டால் தோல்வியை தூள் தூளாக்கும் நகரம் மதுரை என்பதை வாடிவாசல் ஆண்டுதோறும் மெய்ப்பித்துக்கொண்டிருக்கிறது”
- தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்

இந்த அரங்கத்தை இன்று திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இவ்விழாவில், அமைச்சர்கள் மூர்த்தி, எ.வ.வேலு, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்வின்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “இந்த விழாவை பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்துள்ளார் அமைச்சர் மூர்த்தி அவர்கள். தை மாதம் வந்தாலே ஜல்லிக்கட்டு மூர்த்தியாக மாறிவிடுவார் அவர். கோட்டைக்குகூட வராமல் ஜல்லிக்கட்டு மைதானத்திலேயே இருந்துவிடுவார். அந்தளவுக்கு ஏறுதழுவுதலை தன் உயிரென கொண்டுள்ள மூர்த்தியை பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்.

இங்கு அமைந்துள்ள இந்த பண்பாட்டு சின்னம், தமிழ்நாட்டுடைய பண்பாட்டின் மரபின் தொடர்ச்சி. சிந்து சமவெளி காலத்து முத்திரைகளிலேயே திமிலுள்ள காளைகள் உள்ளன. அதில் காளைகளின் நேர்கொண்ட பார்வையை நாம் பார்க்கலாம்... பல்லாயிரமாண்டுக்கு முன்பிருந்த ஓவியங்கள் திரண்டு தொங்கும் தாடை, அகன்று வளைந்த கொம்பு கொண்ட காளைகள் உள்ளன.

கீழடியில் திமிலுள்ள காளையின் முழு எலும்புகூட கிடைத்துள்ளது. முல்லை நில மக்களின் வீர விளையாட்டாக காளையை மையப்படுத்திய ஜல்லிக்கட்டு இருந்துள்ளது. பல இலக்கியங்களிலும் ஜல்லிக்கட்டு பற்றி உயர்வாக எழுதப்பட்டுள்ளது.

குறிப்பாக

‘எழுந்தது துகள்

ஏற்றனர் மார்பு

 கவிழ்ந்தன மருப்பு

 கலங்கினர் பலர்’ - என ஏறுதழுவதல் காட்சியை நம் கண்முன் கொண்டு வருகிறது கலித்தொகை.

தை மாதம் தொடங்கி பொங்கலுக்காக முதல் 3 நாட்கள் வரை, அரசு கருவூலம் தவிர பிற அலுவலங்களை மூடவேண்டுமென பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் அப்போதைய கவர்னர் அறிவித்திருக்கார். தமிழர்களின் வரலாற்றை அந்த காலத்தின் கவர்னர்கள் அறிந்துள்ளனர். ஆண்டுதோறும் ஏறுதழுவதலின்போது அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் உற்சாகமாக காணப்படும். இந்த பண்பாட்டுத் திருவிழா உலகம் முழுவதும் பேசப்படவேண்டும் என்றுதான் இந்த அரங்கத்தை அமைத்தோம்.

தலைவர் கலைஞருக்கு ஏறுதழுவுதல் மேல் தனிப்பாசம் உண்டு. அதனால்தான் தன் மூத்த பிள்ளையான முரசொலியின் சின்னமாக ஏறுதழுவுதலை வைத்தார். தமிழர் பண்பாட்டு விளையாட்டான ஏறுதழுவுதலுக்கு, சங்கம் வளர்த்த மதுரையில் இந்த மாபெரும் அரங்கம் திமுக அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதுவும் தமிழின தலைவர் கலைஞரின் நூற்றாண்டில் அமைக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பு. பல்லாயிரம் ஆண்டு பெருமை கொண்ட நம் தமிழ் இனம் கொண்டாடும் ‘ஏறுதழுவதலுக்காக, இந்த அரங்கத்தை கட்டி எழுப்பியவன் ஸ்டாலின்’ என வரலாற்றில் என் பெயர் இடம்பெறுவது, எனக்கு கிடைத்துள்ள பெருமை!” என்றார்.

தொடர்ந்து ஜல்லிக்கட்டு விவகாரத்தில் கடந்த ஆட்சியான அதிமுக மற்றும் மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்தார் முதல்வர் ஸ்டாலின். அவர் பேசியவற்றை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் விரிவாக காணலாம்.