r.n.ravi, m.k.stalin x page
தமிழ்நாடு

தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிடநல் திருநாடும்’ வரி புறக்கணிப்பு| டிடி தமிழ் விழாவுக்கு கடும் கண்டனம்

தமிழ்த்தாயின் வாழ்த்தில் இடம்பெற்றுள்ள ’தெக்கணும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்’ என்ற வரி விடப்பட்டு பாடப்பட்டதால், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Prakash J

தமிழ்த்தாய் வாழ்த்தின்போது விடுபட்ட வரி!

'பொதிகை' என்ற பெயரில் ஒளிபரப்பு சேவையை வழங்கிவந்த தூர்தர்ஷனின் தமிழ் பிரிவு தொலைக்காட்சி, இந்த ஆண்டு ஜனவரி மாதம் 'டிடி தமிழ்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. முன்னதாக, இதன் லோகோ காவி நிறத்தில் வெளியானதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில், 'டிடி தமிழ்' சார்பில் சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழா கொண்டாட்டங்களுடன் இணைந்து இந்தி மாதம் நிறைவு நாள் விழா கொண்டாடப்படுவது தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக, பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டித்து கடிதம் எழுதியுள்ளார்.

இந்த நிலையில், இந்தி மாதம் நிறைவு நாள் விழா கொண்டாட்டம் இன்று (அக்.18) சென்னை டிடி தொலைக்காட்சி நிலையத்தில் கொண்டாடப்பட்டது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றுப் பேசினார். முன்னதாக, இந்த விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அப்போது, தமிழ்த்தாயின் வாழ்த்தில் இடம்பெற்றுள்ள ’தெக்கணும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்’ என்ற வரி விடப்பட்டு பாடப்பட்டதால் சர்ச்சை எழுந்தது.

இதையும் படிக்க: ”நாம் பேசலாமா?”- பாபா சித்திக் கொலைக்கு பொறுப்பேற்ற லாரன்ஸ் பிஷ்னோய்க்கு அழைப்புவிடுத்த பிரபல நடிகை!

மீண்டும் சர்ச்சையில் ஆளுநர்|முதல்வர் கண்டனம்

இதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தன் எக்ஸ் தளத்தில், “திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழ்நாட்டின் சட்டத்தை மீறுவதாகும். சட்டப்படி நடக்காமல், இஷ்டப்படி நடப்பவர் அந்தப் பதவி வகிக்கவே தகுதியற்றவர்.

இந்தியைக் கொண்டாடும் போர்வையில் நாட்டின் ஒருமைப்பாட்டையும் இந்த மண்ணில் வாழும் பல்வேறு இன மக்களையும் இழிவுபடுத்துகிறார் ஆளுநர்! திராவிட ஒவ்வாமையால் அவதிப்படும் ஆளுநர் அவர்கள், தேசிய கீதத்தில் வரும் திராவிடத்தையும் விட்டுவிட்டுப் பாடச் சொல்வாரா? தமிழ்நாட்டையும் - தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் வேண்டுமென்றே தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநரை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்ப பெறவேண்டும்” என அதில் தெரிவித்துள்ளார்.

அதுபோல் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையும் தனது கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார். அவர், ”ஆளுநரை திருப்திப்படுத்த டிடி தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இவ்வாறு செய்தார்களா? தேசிய கீதத்திலும் ‘திராவிட’ என்ற வார்த்தை வருகிறதே? அதைத் தவிர்த்துவிட்டுப் பாட முடியுமா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இவ்விவகாரம் சர்ச்சையான நிலையில், “தமிழ்த்தாய் வாழ்த்து குளறுபடி விவகாரத்தில் தவறு செய்தோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என தமிழக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. மேலும் தவறுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் எனவும் டிடி தமிழ் குழுவுக்கு ஆளுநர் மாளிகை அறிவுறுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிக்க: கேரளா|பிரிவுபசாரத்தின்போது ஊழல் குற்றச்சாட்டு! வேதனையில் அதிகாரி துயர முடிவு; மகள்கள் இறுதிச்சடங்கு!