எடப்பாடி பழனிசாமி - மு.க.ஸ்டாலின் புதிய தலைமுறை
தமிழ்நாடு

“இவ்வளவு நாள் கற்பனையில் பேசியவர், தற்போது ஜோசியராகவே மாறி உள்ளார்” - முதல்வர் மு.க.ஸ்டாலின்

திமுக கூட்டணியில் விவாதங்கள் இருக்கிறது. ஆனால் விரிசல் இல்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.

PT WEB

செய்தியாளர்: ராஜ்குமார்

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், திமுக  உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினருமான கும்முடிப்பூண்டி கி. வேணு இல்லத் திருமண விழா இன்று நடந்தது. இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, திருமணத்தை நடத்தி வைத்து தலைமை உரையாற்றினார். இந்த நிகழ்வில்  மூத்த அமைச்சர் துரைமுருகன், எம்.பி. டி.ஆர்.பாலு,  பொருளாளர், டி.கே.எஸ் இளங்கோவன், தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமண நிகழ்வில் பேசும்போது, “மணமக்களை வாழ்த்தும் வாய்ப்புற்றமைக்கு மிகவும் மகிழ்ச்சியும் பெருமையாக இருக்கிறது. இது நம்முடைய கழகமெனும் குடும்பத்தின் திருமணம். மிசா சட்டத்தில் எங்களுடன் கைதாகி இருந்த போது பாதுகாவலராக, நண்பராக விளங்கியவர் வேணு. அவரின் திருமணம் தலைவர் கலைஞர் தலைமையில் நடைபெற்றது.

இன்று அவரின் பேரன் திருமணத்தை நான் நடத்தி வைத்துள்ளேன். இது பெருமையாக இருக்கிறது. இத்திருமணத்தில் மணமகள் பெயர் வடமொழியில் இருந்தாலும் அதில் தவறு சொல்லவில்லை. உங்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு தூய தமிழில் பெயர் வையுங்கள் என்று மட்டும் மணமக்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.

நடந்து முடிந்த முப்பெரும் விழாவில் கலைஞர் விருதை வேணுவுக்குதான் வழங்கினோம். உடல்நலம் சரியில்லாத போதும் வந்து நேரில் வாங்கினார் அவர். இவர் போன்றவர்களால்தான், திமுக மக்கள் பணியாற்றுவதில் சிறந்து விளங்கி வருகிறோம்.

மக்களுக்கு நாங்கள் தேர்தலுக்கு முன் தந்த உறுதிமொழிகளை மட்டுமல்லாமல், தராத வாக்குறுதிகளையும், சாதனைகளையும் செய்து வருகிறோம். மக்களால் போற்றப்படும் ஆட்சியை திமுக செய்து வருகிறது. 

ஆனால், மக்களால் ஓரங்கட்டப்பட்ட அதிமுக பொதுச் செயலாளர், ‘திமுக கூட்டணி விரைவில் உடையப் போகிறது’ என்று சொல்கிறார். இவ்வளவு நாள் கற்பனையில் பேசியவர், தற்போது ஜோசியராக மாறி உள்ளார்.

மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி

பொறாமையில் செல்லாக் காசாக உள்ள எடப்பாடி பழனிசாமி, விரக்தியின் எல்லைக்கு சென்றுள்ளார். தன் கட்சியை பார்க்காமல், நன்கு வளர்ந்துள்ள திமுக கட்சியை பார்த்து பக்கத்து வீட்டில் நடப்பதை பார்த்து பேசி வருகிறார்.

திமுக கூட்டணி கொள்கைக்காக இணைந்த கூட்டணி. மக்கள் நல கூட்டணி. எங்கள் கூட்டணிக்குள் விவாதங்கள் இருக்கலாம், ஆனால் விரிசல் இருக்காது.

சென்னையில் சமீபத்தில் மழை வந்தது. தமிழக முதலமைச்சராக நான் வந்தேன், துணை முதலமைச்சர், அமைச்சர் பெருமக்கள் வந்தனர். ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தான் முதல்வராக இருந்தபோதும் இல்லாதபோதும் மழை வந்ததும் சேலத்திற்கு சென்று ஒளிந்து கொண்டார். ஆட்சியில் இருந்தாலும் வர மாட்டார், இல்லாவிட்டாலும் வர மாட்டார். ஆகவே, 2026-ல் மட்டுமல்ல எந்த தேர்தலானாலும் திமுக-தான் வெற்றி பெறும்” என்றார்.