ஜி.கே. மணி - முதலமைச்சர் ஸ்டாலின்  முகநூல்
தமிழ்நாடு

சட்டப்பேரவையில் இன்று | சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து ஜி.கே.மணி கேள்வி... முதலமைச்சர் பதில்!

ஜெனிட்டா ரோஸ்லின்

தமிழக சட்டப்பேரவை நடைபெற்று வரும் சூழலில், சட்டப்பேரவையில் இன்று மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று கொண்டு வருகிறது. இதில் உயர்க்கல்வி, பள்ளிக்கல்வி, வருவாய்த்துறையின் மீதான விவாதத்தில் பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி ”10.5% இடஒதுக்கீடு நீண்ட நாள் கிடப்பில் உள்ளது; சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்துங்கள்" என்று கோரிக்கை வைத்தார்.

சட்டப்பேரவை | முதல்வர் மு.க.ஸ்டாலின்

இவரின் கேள்விக்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், “சாதிவாரி கணக்கெடுப்பிற்கு நல்லதொரு தீர்வு காண வேண்டும் என்று சொன்னால், மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசுதான் நடத்த வேண்டும். அதற்காக இந்த சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே ஒரு தீர்மாணம் கொண்டுவர நாங்கள் முடிவெடுத்திருக்கிறோம். அதற்கு அனைவரும் ஆதரவு தரவேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்” என்றார்.

மேலும் இது குறித்து பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “10.5% குறித்த தரவுகள் இல்லாததால் உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்றம் அதை நிறுத்தி வைத்துள்ளது. மேலும், 10.5% இடஒதுக்கீடு தொடர்பாக தரவுகளை பெற்றுத்தர நீதியரசர் பாரதிதாசன் குழுவை அமைத்துள்ளோம்” என்று பாமக-விற்கு பதில் அளித்துள்ளார்.

இதை தொடர்ந்து ஜி.கே.மணி உட்பட பாமக எம்.எல்.ஏ-க்கள் பேரவையில் இருந்து வெளியேறினர். வெளியில் வந்தபின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜி.கே.மணி, சாதிவாரி கணக்கெடுப்பு முக்கியம் என்று கூறியிருக்கிறார். அவர் பேசிய விவரங்களை, கீழ் இணைக்கப்படும் வீடியோவில் காணலாம்.