முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் pt web
தமிழ்நாடு

ஒரே நாடு ஒரே தேர்தல் | “இதைவிட காமெடி கொள்கை இருக்க முடியுமா?” சட்டமன்றத்தில் முதலமைச்சர் விமர்சனம்!

சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசினர் தனித்தீர்மானத்தின் கீழ் இரு தீர்மானங்களை முன் மொழிந்தார்.

Angeshwar G

சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசினர் தனித்தீர்மானத்தின் கீழ் இரு தீர்மானங்களை முன் மொழிந்தார்.

அப்போது பேசிய அவர், “நாட்டையும் நாட்டு மக்களையும் அச்சத்திலும் பதற்றத்திலும் வைக்கும் இரு முக்கியமான பிரச்சனைகள் குறித்து இந்த மாமன்றத்தில் தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டிய நெருக்கடியான அரசியல் சூழ்நிலை நமக்கு ஏற்பட்டுள்ளது. ஒன்று ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற மிக மோசமான எதேச்சதிகார எண்ணமாகும். இதை நாம் கடுமையாக எதிர்த்தாக வேண்டும்.

இரண்டாவதாக மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு எனும் அடிப்படையில் தமிழ்நாட்டின் மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை குறைக்க நினைக்கும் சதி. இதனை முறியடித்தாக வேண்டும். இவை இரண்டும் மக்களாட்சியை குலைக்கும் விஷயம் என்பதால், இரண்டுக்கும் எதிராக நாம் அனைவரும் ஒருசேர குரல் கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

ஒரேநாடு ஒரே தேர்தல் முறை முற்றிலும் நடைமுறைக்கு சாத்தியமற்ற ஒன்று. அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சத்திற்கு எதிரானது. அரசியல் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள சுதந்திரமான நேர்மையான தேர்தலுக்கு முற்றிலும் எதிரானது. ஒரே நேரத்தில் தேர்தல் என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்றங்களை முன்கூட்டியே கலைக்க வேண்டிய சூழல் ஏற்படும். அப்படிக் கலைப்பது அரசியல் சட்ட விரோதம் என்பதால் இந்த நடைமுறையை நாம் எதிர்க்க வேண்டும்.

அனைத்து மாநிலங்களிலும் ஆட்சி அமைந்து ஒன்றியத்தில் அமையும் ஆட்சி கவிழுமானால் அனைத்து மாநிலங்களையும் கலைத்துவிட்டு தேர்தல் நடத்துவார்களா? சில மாநிலங்களில் ஆட்சி கவிழ்ந்து தேர்தல் நடத்தும் சூழல் ஏற்பட்டால், ஒன்றியத்தில் ஆட்சியில் இருப்பவர்கள் தானாக முன்வந்து பதவி விலகுவார்களா? இதைவிட காமெடி கொள்கை இருக்க முடியுமா? நாடாளுமன்ற சட்டமன்றத்திற்கு மட்டுமல்ல, உள்ளாட்சி அமைப்புகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியமா?

நாடாளுமன்ற தேர்தலைக் கூட ஒரே நேரத்தில் இந்தியா முழுவதும் நடத்த முடியாத சூழல்தான் இப்போது இருக்கிறது. இந்த நிலையில் நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் 30 மாநில சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடத்துவது மாயாஜாலமா? நகராட்சிகளும் பஞ்சாயத்துகளும் மாநில அரசின் நிர்வாக அமைப்புகள் என அரசியல் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டவை. இவற்றுக்கும் சட்டமன்றம் நாடாளுமன்றத்துடன் தேர்தல் என்பது அரசியல் சட்டவிரோதமானது. உள்ளாட்சித் தேர்தல் முழுக்க முழுக்க மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாகும். அதற்கும் சேர்த்து தேர்தல் நடத்தப்போவதாக சொல்வது மாநில உரிமைகளை பறிப்பதாகும்.

மாநில உரிமைகள், கூட்டாட்சித் தத்துவம், அனைவருக்கும் சம வாய்ப்பு ஆகியவற்றை வழங்கும் அரசியல் சட்டத்தை சிதைக்கவோ, உருமாற்றவோ, விரைவில் மக்களால் நிராகரிக்கப்பட இருக்கும் நாடாளுமன்ற மெஜாரிட்டி உள்ளோரின் செயலுக்கு யாரும் பலியாகிவிடக்கூடாது. எனவே நாடாளுமன்றம், சட்டமன்றம், நகராட்சிகள், பஞ்சாயத்து ஆகியவற்றிற்கு ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற நடைமுறையை மிகக்கடுமையாக எதிர்த்தாக வேண்டும்” என தெரிவித்தார்.

முதல்வர் உரையை தொடர்ந்து, அவர் கொண்டு வந்த தனித்தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.