கலைஞர் நூற்றாண்டு நூலக திறப்பு விழா PT
தமிழ்நாடு

“இதனால் தான் ஷிவ் நாடாரை சிறப்பு விருந்தினராக அழைத்தேன்”- நெகிழ்ந்து கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை நேற்று திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று முதல் அது பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது.

PT WEB

“தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் தனது வாழ்வை அர்ப்பணித்த மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படும்” என கடந்த ஆண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறப்பு விழா - முதல்வர் மு.க.ஸ்டாலின்

அதன்பேரில் தற்போது மதுரையில் 2,13,338 சதுர அடி பரப்பளவில் 6 தளங்களை கொண்ட கலைஞர் நூற்றாண்டு நூலகம் 120 கோடியே 75 இலட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. அதை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஜூலை 15) திறந்தவைத்தார். திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஹெச்.சி.எல் குழும நிறுவனர் ஷிவ் நாடார் மற்றும் ஹெச்.சி.எல் குழும தலைவர் ரோஷினி ஆகியோர் பங்கேற்றனர்.

நூலகத்தின் திறப்பு விழாவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பொது மக்கள் என சுமார் 70 ஆயிரம் பேர் விழாவில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மத்தியில் சிறப்புரை ஆற்றினார். அப்போது, இவ்விழாவிற்கு ஷிவ் நாடார் மற்றும் ரோஷினியை சிறப்பு விருந்தினர்களாக அழைத்தது ஏன் என்ற காரணத்தையும் கூறினார் முதல்வர்.

அவர் கூறுகையில், “இவர்கள் இருவரும் பெரிதாக பொதுமேடைகளில் கலந்து கொள்ளாதவர்கள். அப்படிப்பட்டவர்களை நான் இங்கே அழைத்து வரக் காரணம், மாணவர்களாகிய நீங்கள் இவர்களை பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான். ஷிவ் நாடார், மிகப்பெரிய தொழிலதிபர் என்பது மட்டும் அவரின் பெருமையல்ல.

இந்திய தொழிலதிபர்களில் அதிக நன்கொடை கொடுக்கக்கூடியவர் என்ற பாராட்டுக்கும் உரித்தானவர் ஷிவ் நாடார். ‘உனக்கு பணம் வரும்போது அதிகப்படியானோருக்கு உதவிசெய்’ என இவரின் தாய் இவரிடம் கூறியுள்ளார். அதற்காகவே பல்வேறு அறக்கட்டைகளை தொடங்கியிருக்கிறார் இவர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்

50 நாடுகளில் கிட்டத்தட்ட 2 லட்சம் ஊழியர்களுடன் செயல்படுகிறது இவரின் ஹெச்.சி.எல். நிறுவனம். அப்படிப்பட்ட இவரும், உங்களைப்போல அரசுப்பள்ளியில் படித்த ஒரு மாணவர்தான். மாநகராட்சி பள்ளியில் படித்து, இன்று இவ்வளவு பெரிய மனிதராக உயர்ந்துள்ளார். அதை உங்களுக்கு தெரியப்படுத்தி, நம்பிக்கை நட்சத்திரமாக அவரை அறிமுகப்படுத்தவே இன்று சிறப்பு அழைப்பாளராக அழைத்தோம்” என்றார்.