முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், சான்பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற புலம் பெயர் தமிழர்கள் மாநாட்டில் பங்கேற்றார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், தொழில் முதலீடுகளை ஈர்க்க வந்திருந்தாலும், அமெரிக்காவில் இந்தியச் சொந்தங்களை சந்திப்பது மகிழ்ச்சியளிப்பதாகக் கூறினார். இந்தியா - அமெரிக்கா இடையே நட்பு ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் பல ஆண்டுகளாக நல்லுறவு நீடிப்பதாக முதலமைச்சர் பெருமையுடன் சுட்டிக்காட்டினார்.
அமெரிக்காவில் உயர்கல்வி பயில்பவர்களில், இந்திய மாணவர்கள் இரண்டாம் இடத்தில் இருப்பதாக மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார். அமெரிக்காவில் இந்தியர்கள் வெற்றி பெற்றிருப்பதற்கு கடின உழைப்பும், தன்னம்பிக்கையும் தான் காரணம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.
முதலமைச்சரின் அமெரிக்க பயணத்தின் முக்கிய அம்சமாக, எலக்ட்ரோலைசர்கள் உற்பத்தி மற்றும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தித் துறையில், 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஓமியம் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தின் மூலம், செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது.