கொரோனா தடுப்புப் பணி மற்றும் பாதிப்பை ஈடுசெய்ய தமிழகத்திற்கு ரூ. 9000 கோடி தேவை என முதலமைச்சர் பழனிசாமி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கொரோனா தடுப்பு குறித்து தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கெனவே பல்வேறு அரசு மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு என சிறப்பு வார்டுகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் அரசின் கோரிக்கையை ஏற்று தனியார் மருத்துவமனையிலும் சிறப்பு வார்டுக்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா நிவாரணப்பணிக்காக தமிழக அரசு முதலில் 60 கோடி ஒதுக்கப்பட்டதையடுத்து அது மாநில பேரிடர் நிதியிலிருந்து 500 கோடியாக அறிவிப்பு வெளியானது.
பின்னர், தமிழக அரசு சார்பில் 3,280 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த 4 நாட்களுக்கு முன்பு 4 ஆயிரம் கோடி ரூபாய் தேவை என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், தற்போதைய சூழலுக்கு 9 ஆயிரம் கோடி ரூபாய் தேவை என கடிதம் எழுதியுள்ளார். மேலும், சவாலான இந்த தருணத்தில் நாட்டின் நலன் கருதி தமிழகத்தின் கோரிக்கை பிரதமர் மோடி நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா குறித்து பிரதமரின் இரண்டாவது உரையின் போது மாநிலங்களுக்கு மொத்தமாக 15 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில், முதலமைச்சர் 9 ஆயிரம் கோடி கேட்டு கடிதம் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.