தமிழ்நாடு

சுற்றுச்சுவர் இடிந்து விபத்து: சம்பவ இடத்தில் முதல்வர், துணை முதல்வர் நேரில் ஆய்வு

சுற்றுச்சுவர் இடிந்து விபத்து: சம்பவ இடத்தில் முதல்வர், துணை முதல்வர் நேரில் ஆய்வு

webteam

மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்த சம்பவத்தில், சுவர் இடிந்த பகுதிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர்.

மேட்டுப்பாளையத்தில் பங்களா வீடு ஒன்றின் சுற்றுச்சுவர் கருங்கற்களால் கட்டப்பட்டது. அந்தச் சுற்றுச்சுவரின் உயரம் 20 அடியாகும். 80 அடி நீளம் கொண்ட அந்தக் கருங்கல் சுற்றுச்சுவரின் அகலம் 2 அடியாகும். தொடர் மழையின் காரணமாக 3 ஆள் உயரம் கொண்ட அந்தச் சுவரின் ஒரு பகுதி அருகில் இருந்த மண் வீடுகள் மீது விழுந்தது.

அதிக எடை கொண்ட கருங்கல் சுவர் விழுந்ததால் மண்ணால் கட்டப்பட்ட ஓட்டுவீடுகள் தரைமட்டமாயின. இந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். ஒரே நேரத்தில் 17 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுச் சுவர் இடிந்து விழுந்த இடத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறிவருகின்றனர்.

இந்நிலையில், சுவர் இடிந்து விபத்து ஏற்பட்ட இடத்தினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர். அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோரும் ஆய்வு மேற்கொண்டனர். சம்பவம் நடந்தது குறித்து முதல்வரிடம் அதிகாரிகள் விளக்கினர். பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல்வர் ஆறுதல் கூறினார்.