தமிழ்நாடு

இலவச செட்டாப் பாக்ஸ் வழங்கும் திட்டம்: முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

இலவச செட்டாப் பாக்ஸ் வழங்கும் திட்டம்: முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

webteam

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி சந்தாதாரர்களுக்கு இலவச டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ் வழங்கும் திட்டத்தை சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இலவச செட்டாப் பாக்ஸ்களை தமிழ்நாடு அரசு கேபிள் டிவி சந்தாதாரர்களில் சிலருக்கு பழனிசாமி வழங்கினார். மேலும், டிஜிட்டல் ஒளிபரப்புக்காக நுங்கம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள தரம் உயர்த்தப்பட்ட கட்டுப்பாட்டு அறையையும் காணொலி காட்சியில் முதலமைச்சர் திறந்து வைத்தார். அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு டிஜிட்டல் ஒளிபரப்புக்கான உரிமத்தை மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் கடந்த ஏப்ரல் மாதத்தில் வழங்கியது. அதன் அடிப்படையில் இப்போது டிஜிட்டல் சேவைக்கான செட்டாப் பாக்ஸ்களை ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்றும் வகையில் அரசு இலவசமாக வழங்குவதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.

செட்டாப் பாக்ஸ்களை கொள்முதல் செய்ய உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் மூலம் இலவச செட்டாப் பாக்ஸ்கள் சந்தாதாரர்களுக்கு வழங்கப்பட்டப் பிறகு கட்டுப்பாட்டு அறையில் இருந்து அவை செயலாக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி, வரி நீங்கலாக125 ரூபாய்க்கு 180 சேனல்களைக் காணலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 3 தொகுப்புகளின் கீழ் கூடுதல் கட்டணத்தில் அதிக சேனல்களை தேர்வு செய்யவும் முடியும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.