தமிழ்நாடு

‘கதர்’ தயாரித்த ஷாம்பு, பாடி வாஷ் - அறிமுகம் செய்தார் முதலைமைச்சர் பழனிசாமி

webteam

தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட ஷாம்பூ, பாடி வாஷ் மற்றும் ஹேண்ட் வாஷ் போன்ற பொருட்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிமுகம் செய்து வைத்தார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே‌ உள்ள கண்டனூரில் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் சார்பில், புதிதாக சோப்பு மற்‌றும் ஷாம்பு தயாரிக்கும் கூடம் அமைக்கப்பட்டது. இங்கு கற்றாழை, நெல்லிக்காய், தேயிலை மர எண்ணெய் போன்ற பொருட்களை கொண்டு இயற்கையான முறையில், தலைமுடி நீர்மம் (ஷாம்பு) தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு சாரல் என பெயரிடப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் பழனிசாமி அறிமுகம் செய்து வைத்தார்.

இதேபோல் இயற்கை மூலப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட, எழில் என பெயரிடப்பட்டுள்ள குளியல் நீர்மம் (Body Wash) மற்றும் வைகை என பெயரிடப்பட்டுள்ள கைகழுவும் நீர்‌மம் (Hand Wash) ஆகியவற்றையும், முதலமைச்சர் அறிமுகப்படுத்தினார். இந்த பொருட்கள் கதர் அங்காடிகள், நியாய விலைக் கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன.