தமிழ்நாடு

முதலீடுகளை ஈர்க்க ‘யாதும் ஊரே’ இணையதளம் - முதல்வர் அறிவிப்பு 

முதலீடுகளை ஈர்க்க ‘யாதும் ஊரே’ இணையதளம் - முதல்வர் அறிவிப்பு 

webteam

தமிழகத்தில் முதலீடுகளை ஈர்க்க ‘யாதும் ஊரே’என்ற இணையதளம் அமைக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் விதி எண் 110இன் கீழ் தொழில்துறை சார்ந்த அறிவிப்புகளை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார். உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள், தமிழ்ச் சங்கங்கள், தொழில் அமைப்புகளுடன் தொடர்பு ஏற்படுத்தி முதலீட்டு தூதுவர்களை உருவாக்கி முதலீடுகளை ஈர்க்க ‘யாதும் ஊரே’ என்ற தனிச் சிறப்பு பிரிவு மற்றும் வலைதளம் 60 லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்படும் என அறிவித்தார். 

‘தொழில் தோழன்’ என்ற இணைய அடிப்படையிலான குறைதீர் வழிமுறை ஏற்படுத்தப்படும், தொழில் வளர் தமிழகம் என்ற பெயரில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தொழில்கள் தொடர்பான நிகழ்ச்சிகள் ‌நடத்தப்படும், காஞ்சிபுரம் வல்லம் - வடகால் மற்றும் ஈரோடு பெருந்துறை சிப்காட் பூங்காக்களில் தலா 50 கோடி ரூபாய் மதிப்பில் தொழிற்கூட கட்டடங்கள் ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்தார். 

அனைத்து மாவட்டங்களையும் தொழில் மயமாக்க தனியார் நில உரிமையாளர்களுடன் இணைந்து கூட்டாண்மை முறையில் தொழில்பூங்காக்கள் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோவையில் 200 கோடி மதிப்பில் கூடுதலாக ஒரு தொழில்நுட்ப வளாகம், ஸ்ரீபெரும்புதூரில் 100 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் புதுமை கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில் முனைவோருக்கான சிறப்பு மையம் அமைக்கப்படும் எனத் தெரிவித்தார். 

கயிறு தொழில் கூட்டுறவு சங்கங்களுக்கு 2 கோடியே 33 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் , காஞ்சிபுரம் மற்றும் ‌‌நாகை மாவட்டங்களில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும் , மக்களை தேடி அரசு என்ற திட்டம் செயல்படுத்தப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிட்டார்.