தமிழ்நாடு

ஒப்புதலைப் பெற்றுத் தாருங்கள்: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

webteam

மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வகை செய்யும் மாநில அரசின் மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுத் தருமாறு பிரதமர் மோடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், மத்திய, மாநில அரசுகளின் பொதுப்பட்டியலில் உள்ள கல்வி தொடர்பாக சட்டம் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் இருப்பதை உறுதி செய்துள்ள நீதிமன்ற தீர்ப்புகளை சுட்டிக்காட்டியுள்ளார். அதன்படி, நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் வகையில் மாநில அரசு சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றியது சட்டரீதியாக செல்லத்தக்கது என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். எனவே, நீட் தொடர்பாக மாநில அரசு நிறைவேற்றியுள்ள 2 மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்குமாறு பிரதமரை எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.