தமிழ்நாடு

எம்எல்ஏ கனகராஜ் உடலுக்கு முதல்வர் மற்றும் துணை முதல்வர் நேரில் அஞ்சலி

எம்எல்ஏ கனகராஜ் உடலுக்கு முதல்வர் மற்றும் துணை முதல்வர் நேரில் அஞ்சலி

webteam

கோவை சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் இன்று காலை மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் நேரில் அஞ்சலி செலுத்தினர். 

கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ். வயது 64. வழக்கம்போல இன்று அதிகாலை வீட்டில் தினசரி செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் போஸ் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி கனகராஜின் உயிர் பிரிந்தது.இதனையடுத்து கனகராஜ் உடல் சூலூர் பகுதியில் உள்ள அவரது இல்லத்திலேயே இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், அவரின் உடலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். அப்போது அவரது குடும்பதினருக்கு முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  “எம்எல்ஏ கனகராஜ் அவர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. மக்கள் பணிகளை சிறப்பாக நிறைவேற்றியவர்.கிளைக் கழகச் செயலாளராக பணியை தொடங்கி படிப்படியாக உயர்ந்து எம்எல்ஏவாக ஆனாவர். அனைவரிடத்திலும் அன்பாக பழகக்கூடியவர். மக்களிடத்தில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர். அவரின் இழப்பு கழகத்திற்கு ஒரு பேரிழப்பு” என்று இரங்கல் தெரிவித்தார். அப்போது உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி உடனிருந்தார்.

மேலும் இன்று மாலை 4 மணியளவில் அவரைன் இறுதிச் சடங்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் மிக மூத்த தலைவராக கருதப்படும் எம்எல்ஏ கனகராஜ் மறைவிற்கு, அதிமுகவினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் காலியாக உள்ள 21 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 3 தொகுதிகளுக்கு வழக்கு காரணமாக இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் பதவியில் இருக்கும் அதிமுக எம்எல்ஏ ஒருவர் மரணம் அடைந்துள்ளார். இதனால் இந்த தொகுதிக்கும் 3 தொகுதியோடு சேர்த்து இடைத்தேர்தல் அறிவிக்கப்படலாம் எனத் தெரிகிறது.