தமிழ்நாடு

கிளப்கள், சங்கங்கள், ஸ்பாக்களை கண்காணிக்க எஸ்பி தலைமையில் குழு - நீதிமன்றம் உத்தரவு

கிளப்கள், சங்கங்கள், ஸ்பாக்களை கண்காணிக்க எஸ்பி தலைமையில் குழு - நீதிமன்றம் உத்தரவு

kaleelrahman

பதிவுசெய்யப்பட்ட க்ளப்கள், சங்கங்கள், ஸ்பாக்கள், மனமகிழ் மன்றங்கள், மசாஜ் சென்டர்கள் ஆகியவற்றில் சட்டவிரோத செயல்கள் நடைபெறாமல் தடுக்க காவல்துறை எஸ்.பி. மற்றும் ஆணையர் தலைமையிலான குழுக்களை அமைக்க தமிழக டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் படிப்பகம் மற்றும் டென்னிஸ் க்ளப் தொடர்ந்த வழக்கில், தங்கள் க்ளப்பிற்கு வரும் உறுப்பினர்கள் டாஸ்மாக் மதுபானக் கடைகளிலிருந்து வாங்கிவரும் மதுபானங்களை அருந்துவதாகவும், அதற்காக லைசன்ஸ் வாங்க வேண்டுமென அரசு அதிகாரிகளும், காவல்துறையும் கட்டாயப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, பொது இடத்தில் மதுபானம் அருந்துவது தடை செய்யப்பட்டு இருப்பதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு காவல்துறைக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னர், நீதிபதி எஸ்.எம் சுப்ரமணியம், படிப்பகம் மற்றும் டென்னிஸ் க்ளப் என பெயர் வைத்துவிட்டு, அந்த நோக்கத்திலிருந்து விலகி, பிற செயல்பாடுகளுக்கு அந்த இடம் பயன்படுத்தப்படுவதாக குறிப்பிட்டு, மதுபானம் அருந்தும் இடத்திற்கு உரிமம் பெற கட்டாயப்படுத்தக் கூடாது என உத்தரவிட மறுத்துவிட்டார்.

மேலும், சங்கங்களின் சட்டத்தின் கீழ் பதிவு செய்த அமைப்புகள் அதன் பதிவு நோக்கிலிருந்து விலகி செயல்பட்டால், அதன் பதிவை ரத்து செய்வதற்கு பதிவுத்துறைக்கு அதிகாரம் உள்ளதாகவும் நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். பதிவுசெய்யப்பட்ட க்ளப்கள், சங்கங்கள், ஸ்பாக்கள், மனமகிழ் மன்றங்கள், மசாஜ் சென்டர்கள் ஆகியவற்றில் சட்டவிரோத செயல்கள் நடைபெறுகிறதா என்பதை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் வகையில் அனுபவம் வாய்ந்தவர்களைக் கொண்டு காவல்துறை எஸ்.பி. தலைமையில் மாவட்ட அளவிலும், காவல் ஆணையர்கள் தலைமையில் மாநகர அளவிலும் சிறப்பு குழுக்கள் அமைக்கும்படி தமிழக டிஜிபி-க்கு உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் அமைந்துள்ள பதிவுபெற்ற சங்கங்கள் விதிகளுக்கு உட்பட்டு செயல்படுவதை உறுதி செய்யவும், தவறினால் நடவடிக்கை எடுக்கும்படியும் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து காவல்துறையினருக்கும் தகுந்த அறிவுறுத்தல்களை தமிழக டிஜிபி 4 வாரங்களில் பிறப்பிக்க வேண்டுமென உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 24ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.