தமிழ்நாடு

டாஸ்மாக்கை மூடு: திருத்தணியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

kaleelrahman

திருத்தணி அருகே டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியை அடுத்துள்ள சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் காசிநாதபுரம் பிரதான சாலை பகுதியில் இரண்டு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. காலை முதல் இரவு வரை மதுகுடிப்போர் குவிந்து வருவதால், அடிக்கடி வாகன விபத்து ஏற்படுவதோடு சாலையில் சென்று வர பெண்கள், சிறுவர்கள் அச்சமடைகின்றனர்.

இந்நிலையில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று ஊராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி பலமுறை பொதுமக்கள் சார்பில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஆத்திரமடைந்த பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் டாஸ்மாக் மதுக்கடைகளை முற்றுகையிட்டு நாகலாபுரம் பிரதான சாலையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து உதவி காவல் கண்காணிப்பாளர் சாய் பரனித் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், 30 நாட்களுக்குள் டாஸ்மாக் கடைகள் மாற்றப்படும் என்று அளித்த உறுதியை ஏற்று போராட்டம் கைவிடப்பட்டது.